கோச்சடையான்’ படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு காதலியாக நடித்த நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவினால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
என்னுடைய உடம்பு, என்னுடைய மனது என்னுடைய சாய்ஸ் என்று ஆரம்பிக்கும் தீபிகா படுகோனே, திருமணம் செய்து கொள்வதோ அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதோ அது என்னுடைய இஷ்டம் என்றும், திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமே செய்யாமல் செக்ஸ் வைத்து கொள்வதோ என்னுடைய தனிப்பட்ட உரிமை என்றும், அது என்னுடைய சாய்ஸ் என்றும் தீபிகா படுகோனே அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோனேவின் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் 3 மில்லியன் பேர் வரை பார்த்துள்ளதாகவும் மிக அதிக அளவில் ஷேர் செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தீபிகா படுகோனே ரஜினியின் மகள் செளந்தர்யாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தீபிகா படுகோனேவின் இந்த வீடியோ குறித்து ஒருசில பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:
குஷ்பு – நடிகை மற்றும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்:
தீபிகா நடிக்காமல் இருந்தாலே எல்லாரும் அமைதியாய்ப் பார்த்திருப்பார்கள். காணொளியில் தீபிகா படுகோன் நடித்திருப்பதால்தான், இது சர்ச்சைக்குரியதாக ஆகியிருக்கிறது. பெண்ணுரிமையைப் பற்றி ஆயிரம் பேர் பேசினாலும், அதை ஒரு பிரபலம் கூறும்போது சர்ச்சைக்குள்ளாகிறது. ஆயிரக்கணக்கில் நேர்மறையான விமர்சனங்கள் வரும்போது சில நூறு எதிர்ப்புகள் வருவது சகஜம்தான்.
என்னைப் பொறுத்தவரையில் அந்தக் காணொளியில் வரும் கருத்துக்கள் எவையும் அநாகரிகமாகவோ, மறுக்கத்தக்கதாகவோ இல்லை.
மாலினி ஜீவரத்னம் – திரைப்பட உதவி இயக்குநர்:
இதுவரைக்கும் பெண் மேல் ஒட்டியிருந்த அத்தனை லேபிளையும் தூக்கியெறிஞ்சுட்டு சுதந்திரமா என் உடல் என் தெரிவுன்னு வாழுறத மட்டுமே அந்த காணொளி உணர்த்துறதா தோணுது.
ஒரு பெண் அடிமையாக வாழ்ந்துட்டு அடிமையாகவே சாகுறதுலதான் கலாச்சாரம், பண்பாடு காப்பாத்தப்படுது. என் தலைல இருக்கிற முடிகூட இப்படித்தான் இருக்கணும்ங்கறத முடிவு பண்ணுறது நான் இல்ல… இந்த சமூகம் தான். உடை, உடல் சுதந்திரம் ஏன் உணர்வு சுதந்திரம் எல்லாமே பாலின அடிப்படைல பெண்களுக்கு கேள்விக் குறிதான்.
கற்பு எல்லாருக்கும் பொதுவானது. அது பாலின அடிப்படையில பெண்ணுக்கு மட்டுமே வச்சா, அப்படிப்பட்ட கற்புங்குற லேபிள் தேவையே இல்லை. பெண்ணுக்கு பர்தா; பெண்ணுக்கு தாலி; பெண்ணுக்கு மட்டுமே ஒழுக்கம்; பெண்ணுக்கு மட்டுமே கற்பு; பெண்ணுக்கு மட்டுமே கலாச்சாரம் கட்டுப்பாடு… பொண்ணோட விருப்பு வெறுப்புகளைத் தெரிவு செய்ய இங்க பெண்ணுக்கே உரிமை இல்லை.
தீபிகாவின் வீடியோவில் மேல்தட்டு பெண்கள் வாழ்வில் ஏற்படவேண்டிய மாற்றங்களுக்காக மட்டுமே பேசப்படுகிறது என நிறைய பேர் பேசுறாங்க. மாற்றம் முதல்ல படிச்ச பெண்கள்கிட்ட இருந்து ஏற்படணும். அவங்களால்தான் அடிதட்டு மக்களுக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியும்.
‘லிவிங் ஸ்மைல்’ வித்யா – நாடக கலைஞர்:
இந்தக் காணொளி, பெண்களைப் பற்றிய பார்வையைச் சொல்கிற விதத்தில் திருப்திகரமாக இருந்தாலும், கொஞ்சம் ஃபேன்ஸியா இருக்கு. மேல்தட்டு பெண்களைப் பற்றி மட்டுமே சொல்லுகிற விதம் மாற்றப்பட்டிருக்கலாம். செக்ஸ் என்பது தனிநபர் சார்ந்த விருப்பம் என்பதை தெளிவா சொல்லி இருக்கு. ஆனால் அதைத் தாண்டிப் பெண்களைப் பற்றிப் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கு.
பெண்களின் தனிப்பட்ட உறவையும், வாழ்க்கையையுமே பேசும் இந்தக் காணொளியில் தலித் பெண்களின் மீதான அடக்குமுறை, வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் கூறியிருக்கலாம்.
பாரதி பாஸ்கர் – பட்டிமன்றப் பேச்சாளர்:
என்னைப் பொறுத்தவரையில் இக்காணொளி பெண்ணுரிமையைப் பேசுகிற காட்சியமைப்பாகத் தெரியவில்லை. பெண்ணுரிமையைப் பற்றி ஒரு வாழ்வியல் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட காணொளியில் நடித்திருக்கும் தீபிகாவே அழகு மற்றும் உடல் சார்ந்த விஷயங்களை மூலதனமாகக் கொண்ட சினிமாவைத்தான் தன் தொழிலாகக் கொண்டிருக்கிறார். உயர்தட்டு பெண்களின் உடல் சார்ந்த விஷயங்களைத் தாண்டி அறிவு, மனம் சார்ந்த விஷயங்கள் முதலியவை இக்காணொளியில் கூறப்படாதது போலித்தனமாய் இருக்கிறது.
என் உடல், என் மனம், என் விருப்பம் என்னும் இதே வார்த்தைகளை ஆண் சொல்லி இருந்தால் இச்சமூகத்தில் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். பெண்ணுரிமை பற்றி 1920-களில் பாரதியே பேசிவிட்டான். இது குறித்து ஒலிக்கும் குரல்கள் நமக்குப் புதிதில்லை. ஆனால் இந்த எதிர்ப்பு எங்கிருந்து வருகிறது, எதை யார் சொல்கிறார்கள் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. இதே கருத்துகளை மலாலா பேசி இருந்தால் அதன் வீச்சும், வீரியமும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் மேல்தட்டுப் பெண்களின் உடல் சார்ந்த விஷயங்களைத் தாண்டி படிப்பு, வேலை, திருமணம், மறுமணம், வாழ்க்கை முறை போன்ற பிற பெண்களின் சொந்த விருப்பத் தெரிவுகள் பற்றி இக்காணொளி எதையும் கூற முற்படவில்லை.