உலகிலேயே பட்டினிச்சாவுக்கு உதாரணமாகக் காட்டப்படும் நாடாக இருக்கிற சோமாலியாவில் நிலையான அரசாட்சி இல்லை. கேட்பாரற்றுக் கிடக்கும் இந்நாட்டின் கடற்கரைகளில் உலகின் வல்லாதிக்க நாடுகள் தங்களது அணு உலைக்கழிவுகளைக் கொட்டி விட்டுச் செல்கின்றன.
கிட்டத்தட்ட இதே போன்ற நிலைமைக்கு இந்தியாவும் பலவிதங்களில் ஆளாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனைக்குரிய உண்மை. பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தங்களது புதிய மருந்தை சோதனை செய்வதற்கு இந்திய ஏழைகளை எலிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மனிதத்தன்மைக்கு எதிரான போக்குதான் நடந்து கொண்டிருக்கிறது.ஒரு மருந்து சந்தைக்கு வர வேண்டுமெனில் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
எலிகள் மீது தொடங்கும் இந்தச் சோதனை கினியா பன்றிகள், குரங்குகள் மீது நடத்தப்பட்டு, இறுதிக்கட்டமாக மனிதர்கள் மீது சோதிக்கப்படும். மனிதர்கள் மீதான சோதனையில் வெற்றிகரமாகச் செயலாற்றினால்தான் அம்மருந்து அங்கீகாரம் பெற்று விற்பனைக்கு வரும். நாளுக்கு நாள் பெருகி வரும் நோய்களை குணப்படுத்த மருந்துகள் அத்தியாவசியத் தேவையாக விளங்குகின்றன. புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க மனிதர்கள் மீது நடத்தப்படும் சோதனையும் தவிர்க்க இயலாததுதான்.
இருந்தும் அச்சோதனைகள் எவ்விதத்தில் நடத்தப்படுகின்றன என்பதில்தான் சிக்கலே. லாபத்தை மட்டுமே கருதுகோளாகக் கொண்ட மருந்து நிறுவனங்கள் மனிதத்தன்மையற்ற முறையில் மருந்துப் பரிசோதனைகளை நடத்துகின்றன. மருந்து நிறுவனங்கள் ஏழைகளின் உயிரை துச்சமாக மதிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
விதிமுறைகளை மீறி நடத்தப்படும் மருந்துப் பரிசோதனைகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது *ஸ்வஸ்திகா அதிகர் மஞ்ச்’ எனும் மருத்துவச் செயல்பாட்டு அமைப்பு. மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனையை வெளிக்கொணர்ந்ததும் இவ்வமைப்புதான். இதன் இணை ஒருங்கிணைப்பாளர் அமுல்யா நிதியிடம் பேசினோம்…
‘‘இந்தூர் அரசு மருத்துவமனையில் இரு பிரபல மருந்து கம்பெனிகள், அரசு மருத்துவர்கள் உதவியுடன் 2 ஆயிரம் ஆரோக்கியமான குழந்தைகளிடம் புற்றுநோய், ஆஸ்துமா, இதய நோய், போலியோ போன்றவற்றுக்கான மருந்துகளைச் சோதித்துள்ளன. போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களிடமும் அவர்களுக்கே தெரியாமல் மருந்துப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு வயது கூட நிரம்பாத 4 ஆயிரத்து 142 குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகளை செலுத்தி, 42 வகை சோதனைகளை நடத்தியதில், 49 குழந்தைகள் இறந்துள்ளனர். ஆந்திராவில் பழங்குடிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் 6 குழந்தைகள் இறந்துள்ளனர். சேலத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2005லிருந்து 2013ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் 17,778 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுள் 3,458 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், குடும்ப நலத்துறை சார்பில் இதுவரை 89 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம்தான் இது போன்ற மருந்துப் பரிசோதனைகளுக்கான அனுமதியை வழங்குகிறது. 2014 ஜூலை 10 அன்று 76 மருந்துகளின் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதே புதிதாக 43 மருந்துகளுக்கான பரிந்துரைகளை மருந்து நிறுவனங்கள் கொடுத்தன. கண்ணை மூடிக்கொண்டு எவ்விதக் கேள்வியுமின்றி, அவற்றுக்கும் அன்றைக்கே அனுமதி கொடுத்துள்ளது.
இதிலிருந்தே தெரிகிறதல்லவா அரசு யாருக்குச் சாதகமாக இயங்குகிறதென்று?விதிமுறைகளை மீறி நடத்தப்படும் இது போன்ற மருந்து பரிசோதனைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். மருத்துவர்கள் என்ன செய்தாலும் நன்மைக்கே என்கிற நம்பிக்கையைத் தகர்த்து, நம் மீது நடத்தப்படும் செயல்பாடுகள் என்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொள்கிற உரிமையை நிலைநாட்ட வேண்டும். மக்களிடையே பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டு, அநீதிக்கு எதிரான குரல்கள் எழுந்தால்தான் இதனை முடிவுக்குள் இட்டுச்செல்ல முடியும்’’ என்கிறார். மருந்துப் பரிசோதனைக்குப் பின் இருக்கும் அரசியல் பற்றிப் பேசுகிறார் மருத்துவரும், மருத்துவ உரிமைகள் தொடர்பான செயல்பாட்டாளருமான ராக்கால்…
‘‘மனிதத்தன்மைக்கு எதிரான மருந்துப் பரிசோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 1947ம் ஆண்டு ஜெர்மனியின் நியூரெம்பர்க்கில் முக்கிய விதிகள் வகுக்கப்பட்டன.
* சோதனைக்கு உட்படுத்தப்படுபவரிடம் முறையாக எல்லாவற்றையும் அறிவிக்க வேண்டும்.
* ஆக்கப்பூர்வமான நோக்கத்துக்காக மட்டுமே சோதனை நடத்தப்பட வேண்டும்.
* சோதனையால் உயிரிழப்போ, உடல்ரீதியான விளைவுகளோ ஏற்படக்கூடாது.
* எப்போது வேண்டுமானாலும் சோதனையிலிருந்து விலகிக் கொள்ளலாம்.
* அபாயகட்டத்தை அடைந்து விட்டால் எப்படிப்பட்ட சோதனையாக இருந்தாலும் நிறுத்தி விடவேண்டும்
இது போன்ற 10 அம்சங்கள் கொண்ட விதி உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது. மேலைநாடுகளில் மருந்துப் பரிசோதனை குறித்த தெளிவும் விழிப்புணர்வும் பெரிய அளவில் இருக்கிறது. நம் நாட்டிலோ இது குறித்தான விழிப்புணர்வு ஒரு சதவிகிதம் கூட இல்லை. நம் நாட்டின் சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லாத காரணத்தால் எவர் வேண்டுமானாலும் இங்கு மருந்துப் பரிசோதனை செய்யலாம் என்கிற நிலைதான் உள்ளது.
மருந்துப் பரிசோதனைக்கென ஒரு நிறுவனம் செய்யும் செலவில் 70 சதவிகிதம் மனிதர்கள் மீதான ஆய்வுக்கானது. மேலைநாடுகளில் மருந்துப் பரிசோதனைக்கு முன் வருகிறவருக்கு நாளொன்றுக்கு ஊதியமாக நம் மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் வரையிலும் தர வேண்டும். அவற்றால் ஏற்படும் விளைவுகளுக்கு லட்சங்களில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இந்தியா போன்ற ஏழை மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் அயல்பணி ஒப்படைப்பு மூலம் இப்பணியை மேற்கொண்டால் ஊதியம், இழப்பீடு தர வேண்டியதில்லை.
அதனால் 60 சதவிகிதம் வரையிலும் ஆய்வுக்கான செலவை மிச்சப்படுத்த முடியும். பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தரும் அற்பத் தொகையை வாங்கிக் கொண்டு இச்சோதனைகளை முடித்துக் கொடுக்கின்றன இங்குள்ள ஒப்பந்த ஆய்வு நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் மருத்துவர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு நோயாளிகளுக்குத் தெரியாமலும், ஏழை மக்களிடம் சல்லிக்காசுகளைக் கொடுத்தும், அவர்கள் மீது மருந்துப் பரிசோதனைகளை நடத்துகின்றன.
தங்கள் மீது நடத்தப்படும் செயல்பாடு என்னவென்பதைக் கூட அறியாத அப்பாவி மக்கள் பல்வேறு விளைவுகளுக்கு ஆளாகின்றனர். மருந்து நிறுவனங்கள், ஒப்பந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவர்கள் இதன் மூலம் நல்ல லாபம் பார்க்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களோ எவ்வித நிவாரணங்களுமின்றி வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் கடுமையாக இருந்த மருத்துவச் சட்டங்கள், 2005ம் ஆண்டு திருத்தப்பட்ட போது பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு மிகப்பெரிய வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. முன்பு அரசு ஆய்வு நிலையங்களில் மட்டும்தான் மருத்துவ ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றிருந்த நிலை மாறி, எங்கு வேண்டுமானாலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளலாம் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த வாசலைப் பயன்படுத்திக் கொண்டு பல மருந்து கம்பெனிகளும் இந்தியாவை நோக்கி வந்தன. 2012ம் ஆண்டு மருந்துப் பரிசோதனைகளை கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டு வரும்படி உச்சநீதி மன்றம் நாடாளுமன்றத்துக்கு சில பரிந்துரைகளை அனுப்பியது. அதன்படி, 2012ம் ஆண்டு இந்திய மருத்துவச் சட்டம் திருத்தப்பட்டு சில முக்கியமான அம்சங்கள் கொண்டு வரப்பட்டன. ‘பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவரிடம் முறையான விளக்கத்தைக் கூறி ஒப்புதல் பெறப்படுவதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அரசு மருத்துவ ஆய்வு நிறுவனத்தில்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கென ஒழுங்குநெறிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்’ என்பனவற்றை அது உள்ளடக்கியுள்ளது. நடைமுறையிலோ சட்டம் என்பது பெயரளவில்தான் இருக்கிறது. இவற்றை முறையாக ஒழுங்குப்படுத்த வேண்டும். ஏழைகளின் உயிர், கிள்ளுக்கீரையல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்கிறார் ராக்கால்.ஏழைகள் என்பவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற பணக்கார நாடுகளின் சிந்தனைக்கு மற்றுமொரு உதாரணம்தான் இந்த மருந்துப் பரிசோதனை.