டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திடீர் கைது. அதிகரித்து வரும் பனிப்போர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரும், தலைமை செயலருமான ராஜேந்திரகுமார் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பனிப்போர் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ., வான அமானத்துல்லாகான் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த தகவலை முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
கடந்த ஜூலை 10-ம் தேதி பெண் ஒருவர் அமானத்துல்லா கான் வீட்டுக்குச் சென்ற போது அவருக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுப்பப்பட்டது. இந்த புகார் குறித்து ஜாமியா நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. பிறகு மேஜிஸ்ட்ரேட் மற்றும் போலீஸாரிடம் அளித்த 2 விண்ணப்பங்களிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும் துன்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து அமானத்துல்லா கான் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.