ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் அறிகுறிகள் தெரிவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கட்சி ஆரம்பித்த ஆறே மாதங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார்.
ஆனால் ஜனலோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாததால், அவர் தனது பதவியை 49 நாட்களில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவருடைய கட்சி படுதோல்வி அடைந்தது. டெல்லியில் ஒரு தொகுதியில் கூட அவரது கட்சி வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க முயன்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. எனவே வேறு வழியின்றி தேர்தல் நடத்துவதே சிறந்த வழி என்று மத்திய அரசு கருதுகிறது. பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதால், மீண்டும் ஆட்சியை மிக எளிதில் கைப்பற்றிவிடலாம் என பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது.
டெல்லி அரசியல் நிலவரம் குறித்து விரைவில் மத்திய அரசுக்கு துணைநிலை ஆளுநர் அறிக்கை சமர்ப்பிப்பார் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிப்பதா? அல்லது தேர்தல் நடத்துவதா? என்பது குறித்து மத்திய மந்திரிசபை கூடி முடிவு செய்யும்.