டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆளுங்கட்சியாக பதவியேற்று நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி உறுப்பினர்கள் 28 பேர், காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஒருவர் என 37 வாக்குகள் கிடைத்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.
இதையடுத்து டெல்லி சட்டசபையின் புதிய சபாநாயகர், மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று மாலை நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா இரு கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி சபாநாயகர் வேட்பாளராக எம்.எஸ். திர் அவர்களும், பாரதிய ஜனதா சார்பில் ஜெகதீஷ் முகி அவர்களும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தற்காலிக சபாநாயகராக தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதீன் அஹமது இருந்து வருகிறார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எட்டு பேர்களின் ஆதரவு கிடைக்கும் வேட்பாளரே சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற முடியும். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஆம் ஆத்மி வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.