ரூ.600 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ள பிரபல டில்லி தொழிலதிபர் தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மத துறவியாக மாறிவிட்டார்.
டெல்லியை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் தொழிலதிபர் ரகுநாத் தோஷி என்பவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜைன மதத்தின் மத பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்ட இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஜைன மத துறவியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மாற விரும்பினார்.
ஆனால் அவரது முடிவுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தனது குடும்பத்தினர்களை சமாதானப்படுத்தி, கடந்த ஞாயிறு முதல் ஜைன மதத் தலைவர் குணரத்ன சுரீஷ்வர்ஜி மகராஜின் கீழ் சீடராக தன்னை இணைத்துக்கொண்டார்.
வெறும் ரூ.30 ஆயிரம் முதலீட்டை வைத்து ஆரம்பத்தில் பிளாஸ்டிக் தொழிலில் இறங்கிய இவர், தொடக்கத்தில் பல போராட்டங்களை கடந்து சென்றாலும் பின்னர் படிப்படியாக அந்த தொழிலின் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு பெரும் தொழிலதிபராக மாறினார்.
தற்போது அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.600 கோடியை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.