டெல்லி முதல்வரின் விசாரணைக்கமிஷன் சட்டவிரோதமானது. ஆளுநர் புகார்

டெல்லி முதல்வரின் விசாரணைக்கமிஷன் சட்டவிரோதமானது. ஆளுநர் புகார்
aravind
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றதில் இருந்தே ஆளுனருக்கும் முதல்வருக்கும் இடையேயான மோதல் நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் மற்றும் தலைமைச்செயலாளர் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தும் அளவுக்கு விஷயம் மிகவும் சீரியஸ் ஆனது. இந்நிலையில் ஆளுனர் மற்றும் முதல்வர் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை குழு அமைத்தது சட்டவிரோதமானது என டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது, 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் விசாரணை குழு அமைத்து டெல்லி அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணை குழு சட்டவிரோதமானது என டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

விசாரணை கமிஷன் சட்டம் 1952-ன் படி மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு மட்டும் தான் தன்னிச்சையாக விசாரணை குழுக்களை அமைக்க அதிகாரம் உள்ளது எனவும், டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் விசாரணை குழுக்களை அமைக்க அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை விசாரணை குழு அமைக்க அவசியம் ஏற்படும்பட்சத்தில் அதற்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கவர்னரின் புகாரை அடுத்து மத்திய அரசு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அமைத்த விசாரணை குழுவை ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ரத்து செய்தால் இந்த மோதல் பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

English Summary; Delhi CM and Governor once again clash

Leave a Reply