அரசுக்கு ஐடியா கொடுக்கும் இளைஞர்களுக்கு ரூ.1.25 லட்சம் உதவித்தொகை. அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி திட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு உயரதிகாரிகளுக்கு உதவும் வகையில் இளைஞர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளார். இதன்படி முதல்கட்டமாக 30 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1.25 லட்சம் வழங்கவுள்ளார்.
அவர்களுடைய பணி முக்கியமான அரசு துறைகளின் உயரதிகாரிகளுக்கு அடித்தட்டு மக்களின் கருத்துகளை கொண்டு வந்து சேர்ப்பதுதான். மேலும் அரசு இயந்திரத்தின் பணியை சுலப மாக்குவது, காலத்தை, சேமிப்பது ஆகிய பயன்கள் இந்த இளைஞர்களால் ஏற்படுவது மட்டுமின்றி மக்களை இந்த இளைஞர்கள் நேரடியாக சந்திப்பதால் தங்களுக்கு தோன்றும் புதிய யோசனைகளையும் அரசு அதிகாரிகளுக்கு அளிப்பார்கள்.
ஆம் ஆத்மி அரசின் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துகளையும் இவர்களே தொகுத்து வழங்குவார்கள். ஏற்கெனவே அரசு அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகளுடன் இந்த இளைஞர்கள் அளிக்கும் கருத்துகள் கேஜ்ரிவால் அரசுக்கு கூடுதல் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த பணியில் இணையும் இளைஞர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி இளநிலை பட்டமாக இருக்கும். என்றாலும் முதுநிலை மற்றும் சிறப்பு தொழில் கல்விப் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று பட்டதாரி இளைஞர்களை மாநில அரசின் கவுரவப் பதவிகளில் குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகள் பயன்படுத்தி வந்தாலும் அங்கு அவர்களுக்கு ரூ. 20,000 மட்டுமே மாத உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஆனால் இதே பணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ரூ.1.25 லட்சம் உதவித்தொகையாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை அடுத்த ஆட்சி அமைக்கவுள்ள தமிழக முதல்வரும் செயல்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.