டெல்லி சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீதான வழக்குகள் தொடரும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றபோது தெருவிளக்கு வாங்கியதில் ஊழல் புரிந்ததாக ஷீலா தீட்சித் மீது, கிருஷ்ணா–கோதாவரி இயற்கை எரிவாயுக்கான விலையை தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, விதிமுறைகளுக்கு மீறி ஏற்றிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முகேஷ் அம்பானி மீதும் உள்ள வழக்குகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல்வர் பதவியேற்றதுமே இந்த இரு வழக்குகளையும் விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி டெல்லியில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த ஊழல் விபரங்கள் தூசிதட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.