வேலை நிறுத்தத்திற்கு டெல்லி ஐகோர்ட் தடை. இன்றும் நாளையும் வங்கிகள் இயங்கும்
பாரத ஸ்டேட் வங்கியின் கிளை வங்கிகளை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஐ.டி.பி.ஐ வங்கியை தனியார்மயமாக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டும் இன்றும், நாளையும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் செய்ய அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்த வேலை நிறுத்தத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே இந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசை எதிர்த்து நடைபெறவிருந்த இந்த வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்தும் வகையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்பு தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள், வங்கி நிர்வாகங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் சங்கம் நேற்று வரை அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஸ்டேட் வங்கியின் மேற்குறிப்பிட்ட 5 துணை வங்கிகளின் நிர்வாகம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்து உள்ளார். மேலும், அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் இன்றும், நாளையும் செயல்படும் என்றும் அவர் கூறினார்.