டிடிவி தினகரனை கைது செய்ய வந்ததா டெல்லி போலீஸ்? திக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு
கடந்த சில வாரங்களாக அதிமுக அம்மா அணியின் சக்திமிக்க நபராக வலம் வந்த டிடிவி தினகரனை கட்சியின் மூத்த அமைச்சர்கள் ஒதுக்கி தள்ளிய நிலையில் இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் அவருக்கு சம்மன் கொடுக்க டெல்லி போலீசார் நேற்றிரவு அவரது வீட்டிற்கு வந்தனர்.
தினகரனை நேரில் சந்தித்து சம்மனை அளித்த டெல்லி போலீசார் வரும் சனிக்கிழமை டெல்லிக்கு விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டு சென்றுவிட்டனர். டெல்லி போலீஸார் தினகரனை கைது செய்யத்தான் வந்துள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து தினகரனின் ஆதரவாளர்கள் தினகரன் வீட்டின் முன் குவிந்தனர்.
இதில் ஒரு தொண்டர் டெல்லி போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீக்குளிக்க முயன்றதால் நள்ளிரவிலும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக அந்த தொண்டரை மற்ற தொண்டர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வரும் சனிக்கிழமை டெல்லி போலிசார் முன் ஆஜராகவுள்ள தினகரன் கைது செய்யப்படுவாரா? அவர் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை அரசியல்விமர்சகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.