டெல்லி ஜவகர்லால்நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவெங்கடேஸ்வர வைபவ உற்சவத்தின் 7வது நாளான நேற்று அபிஷேக சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மூலவருக்கு அபிஷேக சேவை நடப்பது வழக்கம். இதேபோல் டெல்லி ஜவகர்லால்நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவெங்கடேஸ்வர வைபவ உற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை6.45 மணிக்கு சுப்பிரபாத சேவையும், 7.15 மணி முதல் 8.15 மணி வரை தோமாலை, கொளு நடைபெற்றது. பின்னர் 8.15 முதல் 9.15 வரை அர்ச்சனை நடைபெற்றது. 9.15 முதல் நெய்வேத்தியம் சாத்துமுறை நடைபெற்றது. 10.45 மணிவரை அபிஷேகசேவை நடைபெற்றது. இதில், புணுகுதைலம், கஸ்தூரி, ஜவ்வாது உட்பட சுகந்ததிர வியங்களை கொண்டு சுவாமிக்கு 1 மணிநேரம் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்பட்டது. இதையடுத்து காலை 11.15 மணிக்கு 2வது நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு மாலை 5.30 மணி வரை சர்வ தரிசனத்துக்கு பக்தர்கள் அணுமதிக்கப்பட்டனர். 5.30 மணி முதல் 6.30 மணி வரை சகஸ்கர தீப அலங்கார சேவை நடைபெற்றது. 6.30 முதல் 7 மணி வரை வீதியுலா நடைபெற்றது. இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை இரவு கைங்கரியமும், 8.30 மணி முதல் 9 மணி வரை ஏகாந்த சேவையும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அபிஷேக சேவையில் ஆந்திர மாநில துணை முதல்வர் சின்னராஜப்பா, அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ்ரெட்டி, இணை செயல் அலுவலர் பாஸ்கர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்