பேய்ப்படம் என்றாலே பயமுறுத்தும் திகிலான காட்சிகள் கொண்ட படம் என்று இருந்த நிலையை மாற்றி அதில் காமெடி, குத்துப்பாட்டு, சாமியாட்டம், நல்ல பேய், கெட்ட பேய், என கடந்த சில வருடங்களாக டிரெண்டையே கோலிவுட் இயக்குனர்கள் மாற்றிவிட்டனர். இதில் ராகவா லாரன்ஸுக்கு பெரும் பங்கு உண்டு. பேய்ப்படங்களை பார்க்க பெரியவர்களே பயந்த நிலை போய், பேய்ப்படங்களை குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் படங்கள் மாதிரி கொண்டு வந்துவிட்ட இயக்குனர்கள் மத்தியில் உண்மையாக ஒரு பேய்ப்படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ள படம் ‘டிமாண்டி காலனி’.
சென்னையில் உள்ள டிமாண்டி காலனியில் ஒரு மர்ம பங்களா இருக்கின்றது. இந்த பங்களாவிற்குள் நுழைந்தவர்கள் யாரும் உயிரோடு இருப்பதில்லை என்ற வதந்தி பரவியதால் பல வருடங்களாக பூட்டப்பட்டிருக்கும் ஒரு பங்களாவிற்குள் விளையாட்டாக ஹீரோ அருள்நிதியும் அவரது மூன்று நண்பர்களும் உள்ளே செல்கின்றனர். உள்ளே பலகோடி மதிப்புள்ள தங்க செயின் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வருகின்றனர். இந்த செயினை கொஞ்சம் கொஞ்சமாக விற்று அதில் உள்ள பணத்தை வைத்து லைஃபில் செட்டில் ஆகிவிடலாம் என்று கனவு காண்கின்றனர்.
இந்நிலையில் நான்கு நண்பர்களில் ஒருவர் மட்டும் தூங்கிவிட மற்ற மூவரும் டிவியில் பேய்ப்பட டிவிடி ஒன்றை போட்டு பார்க்க முடிவு செய்கின்றனர். ஆனால் டிவியில் பேய்ப்படம் ஓடுவதற்கு பதிலாக மூன்று நண்பர்களும் ஒவ்வொருவராக கொலை செய்யப்படும் படம் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூவரும் அந்த அறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் கதவு, ஜன்னல் எதையுமே திறக்க முடியவில்லை. இந்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் நான்காவது நண்பர் குறித்து ஒரு அதிர்ச்சி தரும் விஷயம் தெரிய வருகிறது. இதன்பின்னர் மூன்று நண்பர்களும் அந்த அறையில் இருந்து தப்பித்தார்களா? தூங்கிக்கொண்டிருந்த நான்காவது நண்பர் யார்? என்பதை திடுக்கிடும் பல டுவிஸ்ட்களோடு கடைசி அரை மணி நேரத்தில் இயக்குனர் விளக்கியிருக்கிறார்.
மெளனகுரு படத்திற்கு பின்னர் ஹீரோயிஸம் இல்லாத ஒரு கதையை தேர்வு செய்த அருள்நிதிக்கு ஒரு சபாஷ். பேயிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க போராடும் அருள்நிதியின் படபடக்கும் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அவரது நண்பர்களாக வரும் மூவரின் நடிப்பும் வெகு இயல்பாக உள்ளது.
இந்த படத்தில் ஹீரோயினே இல்லை என்பது நிச்சயம் ஒரு புதுமைதான். ஹீரோயின் மட்டுமின்றி ஒரே ஒரு பெண் கேரக்டர்தான் வருகிறது. அதுவும் மூன்றே மூன்று நிமிடங்களுக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல் நாயகன் இசையமைப்பாளர் கெமா ஜெராமியாதான். பின்னணி இசையில் ஆடியன்ஸ்களை அலற வைக்கின்றார். ஒளிப்பதிவும் பிரமாதமாக உள்ளது. ஒரே ஒரு அறையில் பெரும்பாலான படத்தின் காட்சிகள் முடிந்தாலும், அதை அலுப்புத்தட்டாமல் பார்க்க வைப்பது ஒளிப்பதிவாளரின் திறமையினால்தான் என்பது உண்மை
அறிமுக இயக்குனர் அஜய்ஞானமுத்து தன்னுடைய குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரை காப்பாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கடைசி அரைமணி நேரம் ஆடியன்ஸ்களை சீட்டின் நுனிக்கு வரவழைத்த திரைக்கதைக்கு ஒரு சபாஷ். இருப்பினும் முதல்பாதியில் வரும் டாஸ்மாக் பாடல், பணக்கார பெண்மணியிடம் கில்மா செய்யும் நாயகன், யாவரும் நலம் படத்தில் வருவது போல் இருக்கும் டிவி காட்சி ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம். இருப்பினும் தேவையில்லாத மொக்கை காமெடி, குத்தாட்டம் மற்றும் சாமியாட்ட காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்து இரண்டே மணி நேரத்தில் படத்தை முடித்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
ஒரு பேய்ப்படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை ராகவா லாரன்ஸ் போன்ற இயக்குனர்கள் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
டிமாண்டி காலனி. திகிலூட்டும் காலனி