எவ்வளவு நேரம் பல் விளக்கலாம்?

brush_2280826f

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகு? ஒவ்வொருவரின் புன்னகையில் தெரியும்! அழகான புன்னகைக்கு அடிப்படை ஆரோக்கியமான பற்கள். அவற்றைப் பராமரிப்பது குறித்துப் பார்ப்போம்.

பொதுவாகக் குழந்தைகள் அதிக சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை விரும்பி உண்பார்கள். முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் இவற்றை உண்டபின் நன்றாக வாய் கொப்பளிப்பது பல்லுக்கு நல்லது. உணவு வகைகளைப் பொறுத்தவரை, நார்ச்சத்து மிக்க உணவு வகைகள் உடல் நலனுக்கு மட்டுமல்லாமல் பல்லுக்கும் மிகவும் நல்லது. அடுத்து கால்சியம் நிறைந்த பால், தயிர், முட்டை போன்றவற்றையும் உணவில் போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பல் பராமரிப்பு

ஒவ்வொரு முறை உணவு உண்டபின், வாய் கொப்பளித்து பற்களைச் சுத்தம் செய்வது நன்று. கண்டிப்பாகக் காலையும் இரவும் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். இரவில் சுரப்பிகள் மிகமிகக் குறைந்த அளவிலேயே உமிழ்நீரைச் சுரக்கின்றன. எனவே, வாய் சுத்தமாக இல்லாவிட்டால் பல் சொத்தையை உண்டாக்கும் பாக்டீரியாக்கள், உணவுத் துணுக்குகளோடு பல்கிப் பெருகி பற்சிதைவை உண்டாக்கும். அதனால் காலையும் இரவும் கண்டிப்பாகப் பல் துலக்க வேண்டும்.

குழந்தைகளும் இப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை பல்துலக்கும்போதும் தரமான ஃபுளூரைடு (Fluoride) நிறைந்த பற்பசையையும் மிருதுவான பல்துலக்கியையும் பயன்படுத்த வேண்டும். பற்களை அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்க்கக் கூடாது. மிருதுவான, குறைந்த அழுத்தமே போதும். 2-3 நிமிடங்களில் எல்லாப் பற்களையும் சுத்தம் செய்வது, நாக்கு, அன்னம், வாய் ஈறுகள், உட்புறத் தசைகள் போன்றவற்றையும் சுத்தம்செய்வதுடன், விரல்களால் ஈறுகளுக்கு மசாஜும் செய்ய வேண்டும்.

பல்துலக்கியைக் குறைந்தது 3-4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ள வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை தேர்ந்த பல் மருத்துவரிடம் சென்று பல் சுத்தம் செய்துகொள்வது (Scaling) மற்றும் பற்களைப் பரிசோதனை (Consultation and Diagnosis) செய்துகொள்வது நன்மை தரும். பற்சிதைவை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பற்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

Leave a Reply