மன அழுத்தம் ஒரு நோயா?

download (4)

‘நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன்’ என்று எல்லோரும் சாதாரணமாகக் கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் நோய் (Depressive disorder) என்பது வேறு. சுமார் 10 – 15% வரையிலான வளரிளம் பருவத்தினரை இது பாதிக்கிறது. ஏதாவது மோசமான வாழ்க்கைச் சூழலாலும் இது ஏற்படலாம், எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலையில் தானாகவும்கூட ஏற்படலாம். பெற்றோர்களிடமிருந்துகூட மன அழுத்த நோய் ஏற்படுத்தும் மரபணுக்கள் குழந்தைகளுக்குக் கடத்தப்படும்போது வளரிளம் பருவத்தில் மன அழுத்தம் ஏற்படலாம்.

படிப்பில் உள்ள பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம், மன அழுத்த நோய் ஏற்படுவதால் படிப்பில் மந்தத்தன்மை ஏற்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது மூளை நரம்புகளில் காணப்படும் ‘செரடோனின்’ என்ற ரசாயனப் பொருள்தான். இதுதான் ஒருவரின் மன உற்சாகத்தைத் தீர்மானிக்கும் வேதிப்பொருள். எனவே, மன அழுத்தம் யாரையும் பாதிக்க வாய்ப்புண்டு.

மருத்துவக் காரணங்கள்

வாழ்க்கைச் சூழ்நிலைகள், மரபணுக்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் உடல்ரீதியான நோய்கள்கூட மன அழுத்த நோயை உண்டு பண்ணும். உதாரணமாக, தைராய்டு என்ற ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால்கூட மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் 50% பேர்வரை மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் எல்லோரும், தாங்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதில்லை.

குறிப்பாக வளரிளம் பருவத்தினருக்கு நாள்பட்ட தலைவலி, திடீரென ஏற்படும் மயக்கம் அல்லது வலிப்பு போன்ற உடல் அறிகுறிகள்கூட மன அழுத்த நோயின் அறிகுறியாக வெளிப்படலாம். பள்ளி செல்வதைப் புறக்கணித்தல், பள்ளி செல்லும் நேரம் வந்ததும் ஏற்படும் வயிற்றுவலி, வாந்திகூட இதன் அறிகுறியாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட நோய்க்கான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

அறிகுறிகள்

கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம்.

# வழக்கத்துக்கு மாறான மந்தத்தன்மை.

# சுறுசுறுப்பு இல்லாமல் அதிகச் சோர்வுடன் காணப்படுவது.

# முன்பு ஆர்வமாக இருந்த எந்த விஷயத்திலும், தற்போது ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியிருப்பது.

# தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது.

# பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு

# காரணமே இல்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் எண்ணங்கள் ஏற்படுவது.

# தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.

# தான் எதற்கும் உதவாதவன், வாழத் தகுதியற்றவன் என்ற எண்ணம்.

# அதீதக் குற்ற உணர்ச்சி.

# எரிச்சல் தன்மை, கோபம்.

# படிப்பில் பின்தங்குதல், பள்ளியைப் புறக்கணித்தல்.

# காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது.

# புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்.

# அதிகக் கவனக் குறைவு, ஞாபக மறதி.

தடுப்பும் சிகிச்சையும்

# தினமும் மிதமான உடற்பயிற்சி, நண்பர்களுடன் திறந்தவெளியில் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.

# குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், மனப் பாரங்களைப் பகிர்வது அவசியம்.

# புத்தகங்கள் வாசிப்பது, இசைக் கருவிகளை வாசிக்கப் பயிற்சி எடுக்கலாம்.

# நேரத்தைப் பகிர்ந்து செலவிடக் கற்றுக்கொள்வது பலன் தரும் (Time management)

# வேலைகளைப் பட்டியலிட்டு முக்கிய வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பது. மற்றும் பெரிய வேலைகளைப் பகுதிப் பகுதியாகப் பிரித்துச் செய்வதற்குப் பழகலாம்.

# பிரச்சினைகள் எப்போதுமே நிரந்தரமானவை அல்ல, பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.

# பதற்றமான நேரங்களில் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்துப் பிடித்து, சில நொடிகளுக்குப் பிறகு மெதுவாக வெளிவிடலாம். அவ்வாறு செய்யும்போது கைகால், உடல் பாகங்களை இறுக்கமாக வைக்காமல் தளர்ச்சியாக விட வேண்டும்.

# பெரும்பாலான நேரங்களில் ஆலோசனைகளுடன் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படும்.

# தீவிரமான மன அழுத்தம் மற்றும் அதிகமான தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) உடனடியாகப் பலனைத் தரும். இது பாதுகாப்பான முறை மட்டுமல்லாது மாத்திரைகளின் தேவையையும் குறைக்கும்.

Leave a Reply