வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியை பிடித்து மோடி பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா அதிரடியாக அறிவித்துள்ளார்.
நேற்று கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடா, ” இந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற வாய்ப்பே இல்லை. காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் போட்டி போட்டு கொண்டு பணத்தை தண்ணீராக செலவழித்து வருகின்றனர். மக்கள் விரோத போக்கை கடைபிடித்ததால்தான் பாரதிய ஜனதா கர்நாடகத்தில் ஆட்சியை இழந்தது. மீண்டும் கர்நாடகத்தில் அந்த கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா பெரும்பான்மை பெற்று மோடி பிரதமராகும் சூழ்நிலை வந்தால் அரசியலை விட்டே விலகிவிடுவேன். நான் அரசியலில் தொடர்ந்து நீடித்து இருப்பதும், விலகுவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது” என்று பேசியுள்ளார்.