.
நம் குடும்பங்களை தேவன் அதிகமாக நேசிக்கிறார். நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பம். ‘இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்’ (எண். 24:1). எனவே அவர் நம் குடும்பங்களை ஆசீர்வதிக்கிற தேவனாயிருக்கிறார்.
ஆனால் அவர் யாரை ஆசீர்வதிக்க விரும்புகிறார் தெரியுமா? ‘கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:13). அவருக்குப் பயப்படுதல் என்றால் நாம் பரிசுத்தமாக அவருடைய வசனத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்வதே.
அப்படியானால் நாம் அதிகமாக அவருடைய வேத வசனங்களை குடும்பமாக வாசிக்க வேண்டும், அதைத் தியானிக்க வேண்டும். அப்போதுதான் அதன்படி நடக்க முடியும்.
வேதம் சொல்லுகிறது, ‘கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்’ (சங்.128:1). கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கு தேவன் கொடுக்கிற ஆசீர்வாதங்களை நாம் வாசித்து, அதை சுதந்தரித்துக் கொள்ளப்போகிறோம்.
சம்பத்து
‘உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய். உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்’. (சங்.128:2)
நாம் கர்த்தருக்கு பயப்படும்போது தேவன் நமக்கு கொடுக்கிற முதல் ஆசீர்வாதம் ஐசுவரியமே. ஆண்டவர் நம் கைகளின் பலனை ஆசீர்வதிப்பார். நிம்மதியாய் அதை அனுபவிக்க கிருபை தருவார். மேலும், ஐசுவரியத்தை சம்பாதிப்பதற்கான சக்தியையும் அவர் நமக்குத் தருவார்.
ஒருவேளை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வருமானம் போதவில்லை… கடன் பிரச்சினை தாங்க முடியவில்லை… அடிப்படைத் தேவைகள் கூட சந்திக்கப்படவில்லை… என புலம்பி அழுது கொண்டிருக்கிறீர்களா?. சோர்ந்து போகாதீர்கள், கர்த்தருக்குப் பயப்படுங்கள்.
‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்’ (நீதி.8:13). எனவே பரிசுத்தமாக வாழத்தீர்மானியுங்கள். அவர் உங்கள் சம்பத்தைப்பெருகப் பண்ணுவார். உங்கள் கையின் பிரயாசங்களை வாய்க்கப் பண்ணி உங்களை ஆசீர்வதிப்பார்.
சந்ததி
‘உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக்கன்றுகளைப்போல் இருப்பார்கள்’. (சங்.128:3)
‘நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும்… சமாதானத்தையும் காண்பாய்’. (சங்.128)
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் வாழ்வில் அவன் சந்ததியை ஆண்டவர் ஆசீர்வதிப்பார். நம் பிள்ளைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். நாம் ஆண்டவருக்குப் பயந்து நடக்கும்போது நிச்சயம் நம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்.
ஒருவேளை திருமணமாகியும் பல வருடங்களாக குழந்தையில்லையே என கவலையோடு இருப்பீர்களேயானால், கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை உரிமைப் பாராட்டுங்கள். விரைவில் அற்புதங்களைக் காண்பீர்கள்.
சமாதானம்
‘இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்’. (சங்.128:6)
இன்று கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் அநேக குடும்பங்களிலே இல்லாதபடியினால் சமாதானத்தை இழந்து வேதனையோடு காணப்படுகிறார்கள். எல்லாப்பக்கத்திலும் நெருக்கம், குழப்பம், வியாதி என வேதனையோடு காணப்படுகிறார்கள்.
தேவனுக்குப் பயந்து, பரிசுத்தமாக அவர் வழியிலே நீங்கள் வாழும்போது நிச்சயம் தேவன் உங்கள் வாழ்வில் சமாதானத்தைக் கட்டளையிடுவார். உங்கள் எல்லாப் பிரச்சினைகளினின்றும் விடுதலை தந்து, உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சமாதானத்தையும் தந்து உங்கள் குடும்பங்களை ஆசீர்வதிப்பார்.
‘அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்’. (சங்.147:13,14)
சகோதரி. கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.