ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், திருப்பதிக்கு ஏழு முறை விஜயம் செய்திருக்கிறார். ஒவ்வொரு முறை அவர் திருப்பதிக்கு வருவதற்கு முன்னரும் ஏதேனுமொரு போரில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையிலேயே வந்து, வேங்கடவனைப் பணிந்து அந்த வெற்றி
யைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அப்போதெல்லாம் மாபெரும் நிதியங்களை வெற்றிக் காணிக்கையாக அள்ளியள்ளி அர்ப்பணம் செய்திருக்கிறார். அவர் திருமலையில் எழுந்தருளியுள்ள வேங்கடவன் மீது கொண்டிருந்த பக்தி அளவிடற்கரியது; மகத்தானது. ராயரின் முதல் திருப்பதிப் பயணம் நிகழ்ந்தது 1513ம் வருடம் (ஆங்கீரஸ வருடம்), பிப்ரவரி மாதம், பத்தாம் தேதி என வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இந்தப் பயணத்தின்போது, அவர் வேங்கடாஜலபதிக்கு திருவாராதனத்தின்போது, கற்பூர ஆர்த்தி காண்பிக்க இருபத்தைந்து வெள்ளித் தாம்பாளங்கள் சமர்ப்பித்துள்ளார்.
அத்துடன் பெருமாள் கழுத்தில் அணிவிக்க மூன்று வடப் பொற்சங்கிலி ஒன்றும் அளித்திருக்கிறார். அவருடன் வந்த பட்டத்தரசி திருமலாதேவி, இளைய ராணி சின்னாதேவி போன்றோர் மூலம் ஏராளமான பொன்னையும், வைரங்களையும் வாரி வழங்கி யிருக்கிறார். ராஜ புரோகிதர் யக்ஞ நாராயண தீட்சிதர், சிறு அறப்பணிகளுக்காகப் பத்தாயிரம் சக்ரம் பொற்காசுகளை அளித்துள்ளார். இன்னும் பல அதிகாரிகளும் நன்கொடைகளை வழங்கியுள்ளனர். கிருஷ்ண தேவராயர் நிகழ்த்திய திருப்பதி புனித யாத்திரை ஒவ்வொன்றிலும் அவர் வழங்கிய ஏராளமான நிதிக் காணிக்கைகள் பற்றிய விவரங்களைத் தெளிவாகப் பாமரரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் கல்வெட்டுகளாகச் செதுக்கி வைத்துள்ளார். ஒருமுறை முப்பதாயிரம் வராகன்களால் பெருமாளுக்கு கனகாபிஷேகம் செய்துள்ளார்.
உற்சவ மூர்த்திகளான பெருமாள்-ஸ்ரீதேவி-பூதேவி விக்கிரகங்களுக்கு அழகிய நவரத்தின கிரீடங்கள் அளித்துள்ளார். இன்னொரு முறை ஆனந்த நிலைய விமானத்திற்கு பொற்தகடு பொருத்த ஏராளமான பொன்னை வாரி வழங்கினார். (ஏற்கெனவே 14ம் நூற்றாண்டில் ஜடாவர்ம சுந்தர பாண்டியன் திருப்பதி ஆலய விமானத்தில் பொன் வேய்ந்து அலங்கரித்திருந்தான். அடுத்து குமார கம்பணரின் படைத்தலைவன் சாளுவ மங்கலத் தேவனும் தனது அரசன் பெயரால் பொன் வேய்ந்திருந்தான். கிருஷ்ண தேவராயரின் தந்தை சாளுவ நரச நாயக்கரின் ஆட்சியிலும், அவருடைய அமைச்சர் ஆமாத்ய சேகர மல்லண்ணா என்பவர் தமது அரசர் பெயரால் இந்தப் பணியைச் செய்திருக்கிறார். இப்படிக் காலங்கள் தோறும் வடவேங்கடவன் ஆலய விமானம் பொன்னால் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது.)
பொன்னும் மணியும், ஆபரணங்களும் தங்க, வெள்ளிப் பாத்திரங்களும் மட்டுமல்லாது ஏராளமான நிலங்களையும் திருமலை நாயகனுக்காக எழுதி வைத்துள்ளார். கிருஷ்ண தேவராயர், பல கிராமங்களைக்கூட அப்படியே திருப்பதிக்குச் சொந்தமென அளித்துள்ளார். அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய் முழுவதும் வேங்கடவனுக்கே சேர வேண்டியதாகும். ராயரின் பெயரால் 28 சாசனங்களும், அவருடைய இரு ராணிகளின் பெயரால் 26 சாசனங்களும் சேர்த்து மொத்தம் 54 சாசனங்கள், இந்த விவரங்களை இன்றளவும் உலகுக்கு எடுத்துரைக்கின்றன.