மயக்கமென்ன, 3, நையாண்டி, மரியான், ஆகிய நான்கு படுதோல்வி படங்களை கொடுத்த தனுஷ், நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘வேலையில்லா பட்டதாரி” என்ற வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். தனுஷின் 25 வது படமான இந்த படம் வெற்றி பெற்றுள்ளதால் அவருடைய ரசிகர்கள் சமூக இணையதளங்களில் தலைகால் புரியாமல் விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
எந்த ஒரு நடிகருக்கும் 25வது படம் என்பது ஒரு மைல்கல் ஆகும். 25வது படத்தின் வெற்றியை ஒவ்வொரு நடிகரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த வரிசையில் இதுவரை சமீபத்தில் 25வது படத்தை முடித்த நடிகர்களில் அஜீத், விஜய், சூர்யா, வரிசையில் தனுஷும் இணைந்துள்ளார். இவர்களில் விஜய் தவிர அனைவருமே 25வது படத்தை வெற்றிப்படமாக கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத்துக்கு அமர்க்களம் என்ற திரைப்படமும், சூர்யாவுக்கு சிங்கம் என்ற திரைப்படமும் தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும் வேளையில் விஜய்க்கு மட்டும் அவருடைய கண்னுக்குள் நிலவு என்னும் 25 வது திரைப்படம் படுதோல்விப்படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி விஜய்யின் 50வது படமான சுறாவும் படுதோல்விதான். இதனால் தனுஷ் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் 25வது மற்றும் 50வது படத்தை வெற்றிப்படமாக கொடுக்க முடியாத விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையா? என்கிற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மையில் தனுஷுக்குத்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பொருந்தும் என்றும், சூப்பர் ஸ்டாரை போலவே எளிமையை கடைபிடித்து வருபவர் தனுஷ்தான் என்றும் கூறிவருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.