தரம்சாலா டெஸ்ட்: டீமில் முகமது ஷமி, ஷ்ரேயாஸ் அய்யர். அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும் ஒரு டிராவும் ஆகியுள்ள நிலையில் இன்று 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்
இந்த டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி களம் இறங்குவது சந்தேகம் என்பதால், ஷ்ரேயாஸ் அய்யர் அவசரமாக தரம்சாலா அழைக்கப்பட்டார். மும்பையில் இருந்து கிளம்பிய அவர் இன்று காலை அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். தரம்சாலா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், காயத்தில் இருந்து மீண்டுள்ள மொகமது ஷமியும் தரம்சாலா சென்றிருந்தார்.
இந்நிலையில் ஷ்ரெயாஸ் அய்யர் மற்றும் ஷமி ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பி.சி.சி.ஐ, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்திய சீனியர் அணியின் குழு இன்று காலை கூடியது. அப்போது மொகமது ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற இருக்கும் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.