சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேட்டி, சட்டையில் சென்ற உயர் நீதின்ற நீதிபதி மற்றும் மூத்த வழக் கறிஞர்கள் உள்ளே அனுமதிக்கப்படாதது குறித்து பெரும் பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து கண்டங்கள் தெரிவிக்கும் அரசியல்வாதிகள் பலர் சட்டமன்றத்திற்கே பேண்ட் சர்ட்டுகளில் தான் வருவதாக கூறப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியில் இருந்து எம்.எல்.ஏக்களே மாறிவரும்போது ஆங்கிலேயர் ஆரம்பித்த கிரிக்கெட் கிளப்புகளுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு என கிளப் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்புக்குரல் வெளிவருவதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏக்கள் காலம்காலமாக வேட்டி அணிந்துதான் வருகைபுரிவார்கள் ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்கள் வேட்டிக்கு பதில் பேன்ட், சட்டையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
முந்தைய சட்டப்பேரவையில் அப்போதைய திமுக உறுப்பினரான பரிதி இளம்வழுதி, இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன், பாமக வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் டில்லிபாபு, மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார் போன்ற சிலர் பேன்ட் அணிந்து வந்தனர்.
தேமுதிக கட்சியின் கொறடா சந்திர குமார், பாபுவேல்முருகன், சேகர் போன்றோரும் அதிருப்தி உறுப்பி னர்களில் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், மாஃபா பாண்டியராஜன், சுந்தர்ராஜன் ஆகியோரும் பெரும்பாலும் பேன்ட், சட்டையில்தான் பேரவைக்கு வருகின்றனர்.
இந்தப் பட்டியலில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த டில்லிபாபு, பீம்ராவ், தளி ராமச்சந்திரனும் அடங்குவர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எப்போதுமே பேன்ட், கலர் சட்டையுடனே காணப்படுவார். சமக தலைவர் சரத்குமாரையும் அடிக்கடி பேன்ட், சட்டையில் பார்க்க முடிகிறது. அதிமுக-வில் எப்போதாவது சில நேரங்களில் வி.பி.கலைராஜன் பேன்ட் அணிந்து வருவார்.
இவ்வாறு அரசியல்வாதிகளே வேட்டியை மறந்துவிட்டு பேண்ட் சர்ட்டுக்கு மாறிவரும் நிலையில் கிரிக்கெட் கிளப் குறித்து பேச அவர்களுக்கு என்ன தகுதியுள்ளது என மெட்ராஸ் கிளப் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.