ரஷ்ய விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம். ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவிப்பு.
ரஷ்ய விமானம் ஒன்று 224 பேர்களுடன் எகிப்து நாட்டை நோக்கி பயணம் செய்தபோது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அறித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் நேற்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்படையினர்களின் தீவிர முயற்சியால் இதுவரை 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றில் 17 குழந்தைகள் எனப்து குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதலில் செய்திகள் வெளியாகியது. ஆனால் எகிப்தின் சினாய் பகுதியில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, தாங்கள் தான் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு இணையதளமும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த தளத்தில் “ஐ.எஸ். போராளிகள் எகிப்தின் சினாய் மாகாணத்தில், 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். கடவுளுக்கு நன்றி” என கூறப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.