என்னது நேருவை தூக்குல போட்டுட்டாங்களா? மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
4பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி ஆரம்பித்தது முதல் பாஜக பிரமுகர்களும், பாஜக தலைவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் உளறி கொட்டிவிட்டு பின்னர் வாங்கிக்கட்டிக்கொள்வது என்பது அவ்வப்போது நடைபெறும் சம்பவம். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்.
சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜவ்டேகர், ‘‘இந்திய சுதந்திரத்துக்கான போராட்டங்கள் 1857-ல் ஆரம்பித்தன. அந்தக் காலகட்டத்தில் சுதந்திரவேட்கை, மக்கள் போராட்டங்களை நோக்கித் திருப்பியது. 90 ஆண்டுகள் நீடித்த அந்தப் போராட்டத்தின் வழியே நம்மை ஆண்டு வந்த பிரிட்டிஷ் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இந்த நேரத்தில் நமது சுதந்திரத்துக்குப் பாடுபட்ட தலைவர்களை நினைவுகூர வேண்டும். சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபபாய் படேல், ஜவஹர்லால் நேரு, பகத்சிங், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும்’’ என்று கூறினார்.
அவருடைய பேச்சை கேட்டதும் பாஜக கட்சி தலைவர்களே அதிர்ச்சி அடைந்தனர். ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் பட்டேல் ஆகியோர் எப்படி இறந்தார்கள் என்பது எல்.கே.ஜி குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் அவர் தூக்கிலிடப்பட்டதாக பேசியது ஆங்கில மற்றும் வட நாட்டு ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தது.
இந்நிலையில் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில்‘‘நேரு, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபபாய் படேல் ஆகியரோடு தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு போன்றோருக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டதாகவும், அது ஊடகங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும்’’ தெரிவித்து இருக்கிறார்.