ஒன்பதாவது மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் முடிந்த ஒருசில மணிநேரங்களில் டீசல் விலையை மத்திய அரசு கடுமையாக ஏற்றியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மத்தியில் புதிய ஆட்சி அமைக்க கடந்த மாதம் முதல் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. நேற்று ஒன்பதாவது கட்டதேர்தல் முடிவடைந்தது. தேர்தல் முடிந்த சிலமணி நேரங்களில் டீசல் விளையை ரூ.1.09 அதிகரிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையின் விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை டீசல் மற்றும் பெட்ரோல் விலையை உயர்த்தி வந்த மத்திய அரசு, கடந்த இரண்டு மாதங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து விலையை ஏற்றாமல் இருந்தது. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் டீசல் விலையை ஏற்றியுள்ளது. பெட்ரோல் விலையும் ஏற்றப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.60.50ஆக விற்பனை செய்யப்பட்டது. பழைய விலை ரூ.59.18 என்பது குறிப்பிடத்தக்கது.