எட்டு மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்!
இரவு வெள்ளையாக இருக்கும் எதையும் சாப்பிடக் கூடாது!
வாழைப்பழம், உருளைக்கிழங்கைத் தவிருங்கள்!
காபி, தேநீர் குடிப்பதை நிறுத்திவிடுங்கள்!
இத்யாதி, இத்யாதி…
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படும்போதெல்லாம், இந்த மாதிரி உணவுக் கட்டுப்பாடு ஆலோசனைகளைக் நண்பர்களும் உறவினர்களும் வாரி வழங்குவார்கள். ஆனால், இந்த மாதிரி ஆலோசனைகளைக் கட்டுப்பெட்டித்தனமாகப் பின்பற்றுவது, உடல் எடை குறைய முழு பலனளிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் நம்மைச் சுற்றி இந்த மாதிரி நிறைய தவறான கருத்துகள் நிரம்பியிருக்கின்றன. அதனால்தான் தீவிரமாக ‘டயட்’டில் இருப்பவர்களால்கூட, நினைப்பதை முழுமையாகச் சாதிக்க முடிவதில்லை. ‘டயட்டிங்’கை சுற்றி உலாவரும் இந்த மாதிரிக் கற்பிதங்களை விளக்குகிறார் சத்யபாமா பல்கலைக்கழகப் பொது மருத்துவமனையின் உணவு ஆலோசகர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி.
குறைவான கொழுப்பு = குறைவான கலோரி?
குறைவான கொழுப்பு இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தும் குறைவான கலோரியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொழுப்பு குறைவாக இருக்கிறது என்று ‘மிக்சர்’ போன்ற நொறுக்குத் தீனிகளை நிறைய சாப்பிட்டால், ஒரு பாக்கெட் சிப்ஸ் சாப்பிட்ட அளவு கலோரிகளை அது அதிகரிக்கக்கூடும். அது மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களில் கொழுப்பின் அளவை குறைத்துக் காட்டுவதற்காகவும், சுவையை அதிகரிப்பதற்காகவும் மாவு, சர்க்கரை, ஸ்டார் போன்ற பொருட்களை உணவு தயாரிப்பாளர்கள் அதிகம் சேர்க்கின்றனர்.
இது கலோரிகளை அதிகரிக்கும். குறைந்த கொழுப்பு இருக்கும் உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை இருக்காது. இதனால் அவற்றைச் சாப்பிட்டவுடன் உடலில் ஆற்றலாக மாறுவதற்குப் பதிலாக வெறும் கொழுப்பாக மட்டுமே மாறும். அதனால், இயல்பாகவே கலோரிகள் அதிகரிக்கும். குறைந்த கொழுப்புள்ள உணவைச் சாப்பிட்டால் கலோரிகள் குறைவாகவே கிடைக்கும் என்பது ஒரு கற்பிதம்.
அரிசி, உருளை, வாழைப்பழம் வேண்டாம்?
அரிசி, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றைச் சரியான முறையில் சாப்பிட்டால் கலோரிகளை அதிகப்படுத்திக்கொள்ளாமல் ஊட்டச்சத்தைப் பெறமுடியும். உதாரணத்துக்கு, வாழைப்பழத்தைக் காலையில் சாப்பிட்டால் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இது நாள் முழுவதற்கும் உடலை ஆற்றலுடன் வைத்திருக்கும்.
உருளைக்கிழங்கைப் பொரித்துச் சாப்பிடாமல் வேகவைத்துச் சாப்பிட்டால் கலோரிகள் அதிகமாகாது. அதேபோல, சாதம் சாப்பிடும்போது பீன்ஸ், பூசணி வகை காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிட்டால், கலோரிகளின் அளவு குறையும். உணவை முடித்த பின் உடனடியாக வாழைப்பழத்தைச் சாப்பிடாமல், தனியாகச் சாப்பிடுவது நல்லது.
தாமதமான இரவு உணவு நல்லதல்ல?
இரவில் சாப்பிடும் உணவு மட்டும் எடையைத் தீர்மானிக்கப் போவதில்லை. பகலில் சாப்பிடாமல் இரவு மட்டும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு வேண்டுமானால் இந்தக் கருத்து பொருந்தும். மற்றவர்களுக்குப் பொருந்தாது. இரவில் தாமதமாகச் சாப்பிடும் உணவு முழுவதும் கொழுப்பாக மாறுவதற்கு நிறைய சாத்தியம் உண்டு. இரவில் சாப்பிட்ட பிறகு உடல் எந்த வகையிலும் உழைப்பதில்லை. அதனால், அவை முழுவதும் கலோரிகளாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. அதிகபட்சமாக இரவு 9.30 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிடுவது நல்லது.
வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்?
பெரும்பாலான ‘ஃபாஸ்ட் புட்ஸ்’ ஆரோக்கியமற்றவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்காக எப்போதும் வெளியில் சாப்பிடாமலும் இருக்க முடியாது. வெளியில் சாப்பிடும்போது, எண்ணெயில் பொரித்த மசாலா உணவையும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது.
சுவைக்காக அந்த உணவு வகைகளில் பொட்டாசியம் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதற்குப் பதிலாக சாலட், பழச்சாறு, வேகவைத்த உணவு போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். அப்போது கலோரிகள் அதிகரிக்கும் என்று பயப்படத் தேவையில்லை.
குறைந்த உணவு, குறைவான எடை?
உணவைத் தவிர்ப்பதால் எடையைக் குறைத்துவிடலாம் என்று பெரும்பாலோர் நினைக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் தவிர்த்தால், அதற்குப் பதிலாக வேறொரு நேரத்தில் அதிகமாகச் சாப்பிட்டுவிடுவோம். இதனால் எடை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.
வழக்கமாகச் சாப்பிடும் அளவைவிட கூடுதலாகச் சாப்பிடும்போது, அவை உடலில் ஆற்றலாக மாறுவதற்குப் பதிலாகக் கொழுப்பாகவே மாறும். அதனால் சரியான நேரத்தில் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதே சிறந்தது.
ஸ்நாக்ஸ் வேண்டாம்?
டயட்டில் இருக்கும்போது முற்றிலுமாக ஸ்நாக்ஸை தவிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. கணக்குவழக்கில்லாமல் ஸ்நாக்ஸ் சாப்பிட்டால், அது உடல் எடையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமுமில்லை. ஆனால், சரியான விகிதத்தில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டால், உடல் எடையைக் குறைக்கவும் அது உதவும்.
எந்த மாதிரி ஸ்நாக்ஸைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் உடல் எடை குறையுமா, அதிகரிக்குமா என்பது அடங்கியிருக்கிறது. டயட்டில் இருக்கும்போது ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும். மாறாகக் குறைந்த கலோரிகளைத் தரும் புரதச்சத்து நிறைந்த தானியங்கள், காய்கறி சாலட் போன்றவற்றை உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்காது.
சைவ உணவில் புரதம் குறைவு?
சைவ உணவைச் சாப்பிடுபவர்களுக்குப் புரதச்சத்து குறைவாக இருக்கும் என்பதில் ஓரளவு உண்மை இருக்கவே செய்கிறது. ஏனென்றால், பருப்பு வகைகளில் கிடைக்கும் புரதத்தைவிட விலங்கில் கிடைக்கும் புரதத்தின் அளவு அதிகம். சைவப் பிரியர்கள் புரதச் சத்தைச் சீராகத் தக்கவைத்துக்கொள்ளப் பால், தயிர், பருப்பு, முளைகட்டிய தானியம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
விருந்துக்குப் பிறகு விரதம்?
ஒரு நாள் விருந்தில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு அதை சமன் செய்ய அடுத்த நாள் முழுக்கச் சாப்பிடாமல் விரதம் இருப்பது அவ்வளவு நல்ல யோசனை அல்ல. இரவு நன்றாக விருந்து சாப்பிட்டுவிட்டோம். அதனால் அடுத்த நாள் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் காலையில் எழுந்தவுடன், உடலின் செல்கள் உணவை எதிர்பார்க்கும். சாப்பாட்டுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகும்போது, உணவு கொழுப்பாக உடலில் சேரும் வாய்ப்பு அதிகம். அதனால், விருந்து சாப்பிட்ட பிறகு விரதம் இருந்தால் சரியாகிவிடும் என்று யோசிக்காதீர்கள். அது எடையைக் கூட்டவே செய்யும்.
முட்டை ஆரோக்கியமானதல்ல?
இது தவறு. முட்டை ஆரோக்கியமான உணவுதான். தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் ஊட்டச்சத்து குறைவில்லாமல் கிடைக்கும்.
வேகவைத்த முட்டையை மதிய உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. வேகவைத்துச் சாப்பிட்டால் கொழுப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அத்துடன் காய்கறி, கீரை போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
பழங்களே சிறந்த காலை உணவு?
இதுவும் தவறு. பழங்களில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் போன்றவை நிரம்பியிருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், காலை உணவுக்குப் பழங்களைவிட, தானியங்களே சிறந்தவை. தானியங்களில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து போன்றவை இருக்கின்றன. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடலுக் குத் தேவையான ஆற்றல் சீராகக் கிடைக்கும். தானியம், பால், ஏதாவது ஒரு பழம் போன்றவற்றைக் காலையில் சாப்பிட்டால் சரியாக இருக்கும்.