ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பது கடினம்: பாஜக எம்.பி. தருண் விஜய்
பொங்கல் திருநாள் நெருங்கி வருவதை அடுத்து இவ்வருடம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா? இதற்காக அவசர சட்டம் இயற்றப்படுவது சாத்தியமா? என அரசியல் கட்சிகள் ஆலோசித்து வரும் நிலையில் இவ்வருடம் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பது கடினம் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார். பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பல தலைவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்து கொண்டு வரும் நிலையில் பாஜக எம்பி இவ்வாறு கூறியிருப்பது அனைவரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், ‘ஜல்லிக்கட்டு கட்டாயம் நடக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் காங்கிரஸ் கட்சியால் முடக்கப்பட்டு விட்டதால் ஜல்லிக்கட்டு குறித்த முடிவு எடுக்க முடியாமல் போய்விட்டதாகவும் அவர் கூறினார். எனவே தற்போது இருக்கும் குறைவான நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பது கடினமே என்று தெரிவித்தார்.