டிஜிட்டல் இந்தியாவுக்காக ஃபேஸ்புக்கில் ‘ப்ரொஃபைல்’ புரட்சி!

mark-modi_2564206f

சமூக வலைதளங்களின் அபரிமிதமான வீச்சையும், சக்தியையும் தங்களுடைய வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்திக் கொண்டவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும் ஒருவர்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சிலிகான்வேலியில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மத்தியில் பேசினார்.

அப்போது 125 கோடி மக்களை டிஜிட்டல் முறையில் இணைக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, ‘இந்தியப் பிரதமரை வரவேற்பதில் ஆர்வமாக உள்ளேன்’ என்று பதிவிட்டிருந்தார் மார்க்.

இதன் ஒரு பகுதியாக #supportdigitalindia என்ற ஹேஷ்டேகில், மூவர்ணங்கள் கொண்ட இந்தியக் கொடி போன்ற அமைப்பில், ஃபேஸ்புக்கின் வழக்கமான இணைப்பு இழைகளோடு கூடியவாறு தனது ப்ரொஃபைலை மாற்றி அமைத்தார்.

அதனைத் தொடர்ந்து மார்க்குக்கு நன்றி தெரிவித்த மோடி, தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படத்தையும் மாற்றினார்.

‘டிஜிட்டல் இந்தியாவை ஆதரிக்கும் ஃபேஸ்புக் பயனர்கள் குறிப்பிட்ட இணைப்பைச் சொடுக்கி, தங்கள் ப்ரொஃபைல் படங்களை மாற்றிக் கொள்ளலாம்’ என்று மார்க் அறிவிக்க, Digital India வைரலாகத் தொடங்கியது.

ஃபேஸ்புக் பயனாளர்களில் பலரும் தங்கள் ப்ரொஃபைல் புகைப்படங்களை மாற்றினர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படமும் மாற்றப்பட்டிருக்கிறது.

கலிபோர்னியாவின் மென்லோபார்கில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகமான டவுன்ஹாலில் மார்க்- மோடி சந்திப்பு நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்க, ஃபேஸ்புக் குழுமத்தில் இருந்து 40,000-க்கும் மேற்பட்ட கேள்விகள் வந்து குவிந்தன. அமெரிக்காவில் காலை 09.30 மணிக்கும், இந்திய நேரப்படி, இரவு 10 மணிக்கும் தொடங்கியது.

இதில் பேசிய மோடி, ‘மார்க்கின் பெற்றோருக்கு, உலகத்தையே ஒரே குடையின்கீழ் இணைத்த மார்க்கை பெற்றெடுத்தவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி தன் பேச்சைத் தொடங்கினார். தன் தாயாரைக் குறித்தும், பொதுவான தாய்மார்களின் பெருமைகளையும் அங்கு பேசினார்.

இந்த சந்திப்பு மார்க் மற்றும் மோடியின் ப்ரொஃபைலில் ஃபேஸ்புக் வீடியோவாக வெளியிடப்பட்டது.

மோடி அரசின் திட்டங்களின் ஒன்றான டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய நோக்கம், இந்தியக் குடிமகன்கள் அனைவரையும் அரசின் எல்லாத் துறைகளோடும் ஒன்றிணைப்பதாகும்.

இத்திட்டத்தின்படி, காகிதத்தின் தேவை குறைக்கப்பட்டு, எல்லா சேவைகளும் மின் மயமாக்கப்படும். அத்தோடு இந்தியாவின் கிராமப்புறங்கள், அதிவேக இணையவசதி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#supportdigitalindia மற்றும் #digitalindia ஹேஷ்டேகால் ஃபேஸ்புக், இந்தியாவின் சுதந்திரதினத்தைப் போலவும், குடியரசு தினத்தைப் போலவும் தேசியக் கொடி வடிவமைப்போடு காட்சியளிக்கிறது.

அதேவேளையில், இன்னொரு பக்கம் அடிப்படைத் தேவைகளான உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல், விவசாயிகள் பிரச்சினைகளுக்கு முழு தீர்வு காணாமல், அரசு எதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Leave a Reply