‘இராமாயணம்’ டிஜிட்டல் பதிப்பை வானொலியில் வெளியிட்டார் பிரதமர் மோடி
இந்திய மக்கள் போற்றி வணங்கும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுக்கு என்றுமே ஒரு தனி மரியாதை உண்டு. இப்போதும் கூட இராமாயணம், மகாபாரம் தொடர்கள் இந்தியாவின் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் இந்த இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் இந்தி மொழியில் “ராம்சரித்மானஸ்’ என்ற பெயரில் துளசிதாசர் என்பவர் இயற்றினார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குநர் சமர் பகதூர் சிங் என்பவரின் அறிவுறுத்தலின்பேரில், இந்தச் சரிதம் பாடகர்களால் பாட்டுக்களாக பாடப்பட்டு கடந்த 1980ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்தச் சரிதம் வடஇந்திய வானொலிகளில் தினமும் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இதற்கு கோடிக்கணக்கான நேயர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த பாடல் இராமாயணம், தற்போது, டிஜிட்டல் பதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பை புதுடில்லி அகில இந்திய வானொலியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி இராமாயணம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, பிரசார் பாரதி தலைவர் ஏ.சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.