திமுக-தினகரன் கூட்டணியா? அமைச்சர் ஜெயகுமார் திடுக் குற்றச்சாட்டு

திமுக-தினகரன் கூட்டணியா? அமைச்சர் ஜெயகுமார் திடுக் குற்றச்சாட்டு

தினகரன் கட்சியினர் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்து ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

நேற்று கொடைக்கானலில் நிருபர்களுக்கு பேட்டியளித்த்த அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:–

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியின் காரணமாக தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது ஆசியுடன் நடைபெறும் ஆட்சியில் முதல்–அமைச்சரின் நடவடிக்கையால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சர்வ அதிகாரம் பெற்றது.

கர்நாடக அரசு அரசியலமைப்பு சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும். இதனை மீறுவது கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தின் உரிமை கண்டிப்பாக பாதுகாக்கப்படும். சென்னை–சேலம் பசுமை வழிச்சாலையினை காரணமில்லாமல் எதிர்க்கின்றனர். தற்போது தமிழகத்தில் 2½ கோடி வாகனங்கள் உள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரிக்கும்.

வருங்கால தேவையினை கருத்தில் கொண்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த திட்டத்தால் யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. அதிக இழப்பீடு வழங்கப்படுவதால் இந்த திட்டத்திற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு இல்லை. இயற்கையை பாதுகாக்க, அங்கு 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

கவர்னரை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். கவர்னரே தேவையில்லை என்று சொல்பவர்கள், எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அவரை சந்தித்து முறையிடுகின்றனர். நாங்கள் அரசியல் காரணங்களுக்காக 7 முறை ஜெயிலுக்கு சென்றுள்ளோம். ஆனால் எங்களை விடுதலை செய்ய சொல்லி கோரிக்கை விடுத்ததில்லை.

ஆனால் தற்போது கைது செய்யப்பட்டவுடன் விடுதலை செய்யக்கோரி உடனடியாக போராட்டம் செய்கின்றனர். எதையும் தாங்கும் மனப்பக்குவம் குறைந்துள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துகின்றனர்.

கமல்ஹாசனுக்கு அவருடைய விஸ்வரூபம்–2 கர்நாடகாவில் ஓட வேண்டும் என்பதற்காக குமாரசாமியை சந்தித்தார். அதற்காகவே ராகுல்காந்தியையும், சோனியா காந்தியையும் அவர் சந்தித்துள்ளார். இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி முறியுமா? என்பது தெரியாது. தினகரன் அ.தி.மு.க.வே கிடையாது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது 10 ஆண்டுகளாக அவரை சேர்க்கவே இல்லை.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்து வருகிறார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் நிலையில் உள்ள அவர், கனிமொழி விடுதலை ஆனதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply