‘420’ என்பது தினகரனுக்குத்தான் பொருந்தும். எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக தினகரன் நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் முதல்-அமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இன்று காலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொண்டோம். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். ‘420’ என தினகரன் கூறியது அவருக்குதான் பொருந்தும். மூன்று மாத நிலவரத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும், தினகரனுக்குதான் பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றேன்.
அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை, இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகளில் வெற்றி பெறுவோம். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வெற்றி பெற்றோம், இதிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறினார்.