நேரடி காஸ் மானியத் திட்டத்தில் சேரும் நுகர்வோரின் வங்கிக் கணக்கு மற்றும் காஸ் சிலிண்டர் பெறும் வீட்டு முகவரி ஆகியன ஒரே பகுதியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
மத்திய அரசின் நேரடி காஸ் மானியத் திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நுகர்வோர் அவசர அவசரமாக திட்டத்தில் இணைந்து வருகின்றனர்.
நேரடி காஸ் மானியத் திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியம். மேலும், நேரடி மானிய காஸ் திட்டத்தில் சேரும் நுகர்வோர், வங்கிக் கணக்கை எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இரு முகவரிகளும் ஒரே பகுதியில் இருக்க வேண்டும் என்று சில காஸ் ஏஜென்சிகள் மற்றும் வங்கிக் கிளைகள் கூறுவதாக ‘தி இந்து’- ‘உங்கள் குரலில்’ ஒருவர் தகவலை பதிவு செய்திருந்தார்.
இதனால், வாடகை வீடுகளில் வசிக்கும் நுகர்வோரும், வேறு மாவட்டத்தில் இருந்து சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த நுகர்வோர் நலராமன் ‘தி இந்து’- ‘உங்கள் குரலு’க்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்த தகவல் விவரம்:
நான் காஸ் இணைப்பு பெற்றுள்ள வீட்டில் தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால், அருகில் உள்ள வேறொரு தெருவில் தற்காலிகமாக வசித்து வருகிறேன். இந்த நிலையில், நேரடி காஸ் மானியத் திட்டத்தில் பதிவு செய்யச் சென்றபோது, காஸ் ஏஜென்சி மற்றும் மாடம்பாக்கம் வங்கிக் கிளை ஆகியவற்றில், காஸ் சிலிண்டர் பெறும் முகவரியும், வங்கிக் கணக்கு முகவரியும் ஒரே பகுதியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றார்.
இதுகுறித்த சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமையக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நேரடி காஸ் மானியத் திட்டத்தில் சேர அனைத்து ஆவணங்களிலும் ஒரே முகவரி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டபோது இருந்த முகவரி மாறியிருந்ததால், தற்போது வசிக்கும் பகுதிக்கு சான்றாக இருப்பிடச் சான்று கொடுத்தால் போதும். அதுவும் வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டு கேட்டால் மட்டும் அளித்தால் போதும். வங்கிக் கணக்கு மற்றும் காஸ் சிலிண்டர் பெறும் வீடு ஆகியன ஒரே முகவரியில் இருக்க வேண்டும் என்பது சாத்தியம் இல்லாதது’ என்றார்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் கேட்டபோது, ‘நேரடி காஸ் மானியத் திட்டத்தில் சேர அனைத்து ஆவணங்களும் ஒரே முகவரியில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவ்வாறு எந்த விதிமுறைகளையும் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தவில்லை. ஆதார் அட்டையில் உள்ள பெயரும், வங்கிக் கணக்கில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் போதும்’ என்றார். தமிழ்நாடு இண்டேன் காஸ் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கூறும்போது, ‘இண்டேன் காஸ் ஏஜென்சிகளில் உள்ள நுகர்வோரின் வங்கிக் கணக்கு மற்றும் காஸ் சிலிண்டர் பெறும் வீட்டு முகவரி ஆகியன ஒரே முகவரியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றார்.