இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், அவருடைய சிஷ்யர்களில் ஒருவருமான இயக்குனர் அமீர்ஜான் இன்று காலை சென்னையில் காலமானார். 70 வயதாகும் அமீர்ஜான் உடல் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் அமீர்ஜானின் மறைவிற்கு நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1984ஆம் ஆண்டு பூவிலங்கு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அமீர்ஜான் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அவர் பிரபல நடிகர் முரளி மற்றும் நடிகை குயிலியை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூவிலங்கு படத்தின் வெற்றிக்கு பின்னர் நெஞ்சத்தை அள்ளித்தா, இளங்காற்று, ஓடங்கள், நட்பு, தர்மபத்தினி, வண்ணக்கனவுகள், உழைத்து வாழ வேண்டும், சிவா, எதிர்காற்று, உன்னைச்சொல்லி குற்றமில்லை, தைமாசம் பூவாசம், வணக்கம் வாத்தியாரே, குறும்புக்காரன், சின்ன சின்ன கண்ணிலே போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் அமீர்ஜானின் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.