ஆனால் துரதிர்ஷ்டவசமாக அத்தகைய முயற்சிகளை மேற்கொள்பவர்களில் மிகச்சிலரைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள் தோல்வியையே சந்திக்கின்றனர். தொடர் தோல்வியின் விளைவாக பலர் எடை குறைப்பு முயற்சிகளையே கைவிட்டும் விடுகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியாமலேயே இருந்தது.
ஆனால் சுவாரசியமாக, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் மக்களின் உடல் எடை குறைப்பு முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்கான அறிவியல் காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர் விஞ்ஞானிகள். நம் உடலில் உள்ள sLR 11 எனும் ஒரு குறிப்பிட்ட புரதமானது உடலில் இருக்கும் உபரி கொழுப்பு கரையாமல் பாதுகாக்கிறது என்றும், இதன் காரணமாகவே எடை குறைப்பு தொடர்பான நம் பலரின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன என்றும் கூறுகிறது இந்த ஆய்வு!
எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், sLR 11 புரத உற்பத்திக்கு காரணமான sLR 11 மரபணுவைக் கொண்ட எலிகளுடன் ஒப்பிடுகையில் sLR 11 மரபணு இல்லாத எலிகள் தங்களின் உடலில் சேரும் கொழுப்பை பல மடங்கு விரைவாக குறைத்தது கண்டறியப்பட்டது. அது சரி, நம்முடைய உடல் எடை குறைப்பு முயற்சிகளை நம் உடலே ஏன் தடுக்கிறது அல்லது எதிர்க்கிறது?
மனித உடலின் கொழுப்புச்சத்து பொதுவாக வெள்ளை மற்றும் காப்பி நிற அடிப்போஸ் திசு ஆகிய இருவகையான கொழுப்பு திசுக்களாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது. உடலுக்கு ஆற்றல் தேவையான போதெல்லாம் வெள்ளை கரைக்கப்படுகிறது. ஆனால் குழந்தைகளின் உடலில் அதிகமாக காணப்படும் காப்பி நிற கொழுப்பானது உடலை வெதுவெதுப்பான சூட்டில் வைத்திருக்க மட்டும் பிரத்யேகமாக பயன்படுகிறது.
சுவாரசியமாக, இந்த காப்பி நிற கொழுப்பானது விரயமாகாமல் பாதுகாப்பதே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள sLR 11 புரதத்தின் ஒரே வேலை என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரு ஒயிட். இந்த sLR 11 புரதத்தின் மீதான தொடர் ஆய்வுகள் மூலமாக உடல் பருமனாக இருப்பவர்களின் உடல் எடையை குறைக்கக்கூடிய புதிய சிகிச்சை முறைகளை கண்டறிய முடியும் என்கிறார் தலைமை ஆய்வாளர் டோனி விடல் பியூக்.