பித்தப்பை கற்கள் கரைய…!

liver

மனிதர்களுக்கு வயது ஏற ஏற வயிற்றினுடைய தசைப்பகுதியில் கொழுப்பு சேர்வதும், உள்ளுறுப்புகளில் கொழுப்பு அடைபடுவதும் இயற்கையே. ஆனால் சரியான உணவுச் சேர்க்கையின் வாயிலாகவும், சற்று சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வதாலும், உடலில் கொழுப்புச் சேர்வதைத் தவிர்த்து நம்மால் ஓர் ஆரோக்கியமான உடற்கட்டினைப் பெற முடியும். லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் சுமார் ஐம்பதாயிரம் மனிதர்களுடைய உணவுமுறையை ஆராய்ந்து அவர்களுடைய இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேரும் இடத்தை சுமார் ஐந்து வருடங்கள் ஆராய்ச்சி செய்தனர். அதில் அதிகமான அளவில் பழம், பால்பொருட்களை உண்டவர்களுக்குத் தொப்பை விழுதல் மிகவும் குறைந்த நிலையிலும், வெள்ளை ரொட்டி, மாமிச உணவுகள், வெண்ணெய், குளிர்பானங்கள் சாப்பிட்டவர்களுக்கு அதிக அளவில் தொப்பையும் காணப்பட்டன.

வயது ஏற ஏற நமது உடல் பருமன் ஆவதற்கு காரணம், உடற்கூறின் தன்மைக்கு ஏற்ப நாம் நமது உணவை மாற்றியமைத்துக் கொள்ளாததே காரணம். நமக்குத் தேவைப்படும் கலோரியின் அளவு வயது ஏறுகையில் குறைந்தால் உடல் பாரமானது சமநிலையில் இருக்கக்கூடும், அதிலும் முக்கியமாக அங்க அசைவுகள் குறையும்பொழுது. சிறுவயதைப் போலவே ஏறிடும் வயோதிகத்திலும் அதேபோலவே சாப்பிட எத்தனித்தால் பசித்தீயினுடைய குறைவான அளவால் உணவினுடைய செரிமானம் குறைந்து அதுவே ஊளைச் சதைக்குக் காரணமாகலாம். இதுவே இதயநோய், இரத்த அழுத்த உபாதை, சர்க்கரை உபாதை, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் தொய்வான செயல்பாடு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் அடங்கியுள்ள ரசாயனப்பொருட்களை செரிக்கமுடியாமல் அவை இரத்தத்தில் தேங்குவது அதிகரித்தல் போன்ற உபாதைகளுக்கு வித்திடக்கூடும். அதனால் பசித் தீயினுடைய தன்மையை நன்கு கவனித்து அதற்கு கேடு வராதவகையில் சத்து நிறைந்த எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை நடுத்தர வயதில் உண்பது மிகவும் அவசியம். பசியை மிதமான அல்லது சீரான அளவில் வைத்துக் கொள்ளக் கூடிய திறனை ஒரு நடைபயிற்சியின் மூலமாகவோ யோகப்பயிற்சிகளின் மூலமாகவோ நாம் பெறுவது நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்.

பித்தப்பை கற்கள் வயிற்றினுடைய மேற்பகுதியில் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு வாந்தி, காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கும். அறுபது வயது கடந்த பெண்டிருக்கு இது அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. பித்தப் பையினுள் அமைந்துள்ள திரவம் நாம் உண்ணும் கொழுப்புப் பொருட்கள் குடலைச் சேர்கையில் அதைச் செரிமானம் செய்தும் இரத்தத்திலுள்ள கொழுப்பை செரிக்கச் செய்வதிலும் பயன்படுகிறது. அதிகச் அசைவில்லாத வாழ்க்கைமுறை, உடற்பருமன், அதிக நொறுக்குத் தீனி மற்றும் சர்க்கரை உபாதை ஆகியவற்றில் பித்தப்பை கற்கள் விரைவாக ஏற்படக்கூடும். பலநேரங்களிலும் பித்தப்பைகற்கள் அறிகுறிகளின் மூலமாக வெளிப்படுவதில்லை. ஒரு X – Ray அல்லது Ultra sound sonogram வழியாகவே கண்டறியப்படுகிறது. சிலசமயங்களில் தன் இடம் விட்டு நழுவி பித்தம் வயிற்றுக்கு வரக்கூடிய பாதையில் அடைப்பை ஏற்படுத்தி கடுமையான வலியை ஏற்படுத்தும். கற்கள் தாமாகவே குடலுக்குள் வந்துவிட்டால் அவை கரைந்து வெளியேறிவிடக்கூடும். அப்படியல்லாதபட்சத்தில் மருந்துகள் மூலமாகவோ, Shock wave therapy மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சையின் மூலமாகவோ அவை நீக்கப்படவேண்டும். ஒரு பங்கு கொள்ளு, பத்து பங்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து பாதியாகக் குறுக்கி வடிகட்டி அந்த நீரை ஒரு நாளில் பல தடவை சிறுகச் சிறுக பருகுவதின் வாயிலாக பித்தப்பை கற்கள் கரைவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

உத்வர்த்தனம் எனப்படும் ஓர் ஆயுர்வேத சிகிச்சைமுறை உங்களுடைய இந்த இரு உபாதைகளுக்கும் நன்மையைத் தரக்கூடும். வயிற்றினுடைய வலதுபுற அடிப்பகுதியிலிருந்து மேல்நோக்கித் தேய்த்து இடதுபுறம் கீழ்நோக்கி ஆழமாக கொள்ளு மாவை புளித்த மோருடன் கரைத்து சூடாக்கி தேய்த்துவிடுதல். மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலது பகுதிக்குத் தேய்த்துவிடுதல் போன்ற சிகிச்சை மூலமாக வயிற்றிலுள்ள ஊளைச்சதை கரைவதுடன் பித்தப்பை கற்களும் சுருங்குவதற்கான வாய்ப்புள்ளது.

Leave a Reply