சமூக போராளி திவ்யபாரதிக்கு கொலை மிரட்டல்
சமூக போராளியும் ஆவணப்பட இயக்குனருமான திவ்யபாரதி சமீபத்தில் 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் இருந்தாலும் அவருக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு நாளும் திவ்யபாரதியை மர்ம நபர்கள் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வருவதாகவும், அதுமட்டுமன்றி, ஆபாசமான வார்த்தைகளாலும் அவரைத் திட்டியுள்ளதாகவும் திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து திவ்யபாரதி கூறியபோது, ‘”புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எனக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக ஈ போஸ்ட் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில், ‘கக்கூஸ்’ படத்துக்கு எதிராக வழக்குப் போட இருப்பதாக இருந்தது. அதற்கு நான், ‘சட்டரீதியாக அதை எதிர்கொள்வேன்’ எனப் பதிவிட்டிருந்தேன். இந்தநிலையில், அந்தக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் சிலர்… இந்த ….மகளைத் திட்டித் தீருங்கள்’ என போஸ்ட் போட்டு… அதில் என்னுடைய நம்பரையும் பதிவிட்டிருந்தனர். இதையடுத்துதான் எனக்குக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த ஆவணப்படத்தில், இங்கு தலித் சமூகம் மட்டும் துப்புரவுத் தொழிலைச் செய்யவில்லை பலரும் செய்து வருகிறார்கள் எனச் சுட்டிக்காட்டி இருப்பேன். அந்தப் படத்தின் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதை வைத்துக்கொண்டு, ‘எங்களுடையச் சமூகத்தை இழிவுபடுத்திவிட்டாய்’ எனத் தொடர்ந்து போனில் மிரட்டிவருகிறார்கள். ‘அவமானப்படுத்தி வெட்டிக் கொல்வேன்’ என்று மிரட்டுவதுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டுகிறார்கள். இப்படித் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளும் எஸ்.எம்.எஸ்-களும் வந்துகொண்டிருக்கின்றன. அதன்காரணமாகவே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தேன். உண்மை, அந்த ஆவணப்படம் மட்டுமே அல்ல… அதற்குப் பின்னால் வேறு அரசியல் உள்ளது” என்று கூறினார்.
மேலும் தொலைபேசியில் அழைத்து ஊரையும், பேரையும் சொல்லாமல்…தனக்குத் தெரிந்த நான்கு கெட்டவார்த்தைகளைப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுகின்றனர். இதற்குப் பெயர் வீரம் இல்லை. இப்படிச் செய்வதன்மூலம் என்னுடைய வேலைகளை நிறுத்திவிடலாம், முடக்கிவிடலாம் எனக் கணக்குப் போட்டு இவ்வாறு செய்கிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நானில்லை. இதுதொடர்பாக மதுரை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளேன்” என்றார் மிகவும் தீர்க்கமான கூறுகிறார் திவ்யபாரதி