தேமுதிகவின் திருப்புமுனை மாநாடு திருப்பத்தை கொடுக்குமா?
வரும் பிப்ரவரி 20-ம் தேதி காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க. சார்பில் ‘தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு’ நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் விஜயகாந்த் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனால் அரசியல் விமர்சகர்கள் இதை நம்ப தயாராகவில்லை. இப்போதைக்கு எந்த கூட்டணியில் சேருவது என்பது குறித்து விஜயகாந்த் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் இன்னும் குழப்பத்தில் இருப்பதாகவும் கருத்து நிலவி வருகிறது.
12 சதவீத வாக்குகளில் இருந்து படிப்படியாக தேய்ந்து தற்போது 5 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகளை வைத்துள்ள தேமுதிக, கூட்டணியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தல் நிரூபித்தது. ஒருசில மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள பாமக ஒரு தொகுதியிலும், தமிழகத்தில் செல்வாக்கே இல்லாத பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்ற நிலையில் விஜய்காந்தின் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இதிலிருந்தே இந்த கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எப்படி உள்ளது என்பது நிரூபணம் ஆனது.
எனவே வரும் பிப்ரவரி 20ஆம்தேதி நடைபெறவுள்ள திருப்புமுனை மாநாடு மக்களுக்கும் சரி, கட்சிக்கும் சரி எந்தவித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என்றும், தன்னை யாராவது கூட்டணிக்கு அழைக்க மாட்டார்களா? என்பதற்காகவே அவர் இந்த மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.