59 தொகுதிகளுடன் பணமும் கைமாறிவிட்டதா? தேமுதிகவின் காட்டமான அறிக்கை

59 தொகுதிகளுடன் பணமும் கைமாறிவிட்டதா? தேமுதிகவின் காட்டமான அறிக்கை
vijayakanth
தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமே அறிவித்துவிட்டபோதிலும் கூட்டணி யாருடன் என்று விஜயகாந்த் இன்னும் அறிவிக்கவில்லை. குறைந்த பட்சம் எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதுகூட தேமுதிகவின் தலைமையிடம் இருந்து எந்த வித செய்தியும் வெளிவராததால் தேமுதிகவின் நிலை குறித்து பல வதந்திகள் பரவுகிறது. கூட்டணிக்காக பணபேரம், இட பேரம் ஆகியவைகளை ரகசியமாக விஜயகாந்த் வியாபாரம் போன்று நடத்தி வருவதாகவும், யார் அதிக பணமும் தொகுதிகளும் கொடுப்பார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருகிறது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் இன்று தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழக மக்கள் அனைவரும் விஜயகாந்தும், தேமுதிக கட்சியும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்கின்ற மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

விஜயகாந்த் தன்னுடைய முடிவை அறிவிப்பதற்கு முன்பே, ஒரு சிலரால் திட்டமிட்டு பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளாக வெளியிடுகின்றன.

அந்த வதந்திகளில், ஒரு கட்சியுடன் 59 தொகுதிகள் பேசி முடித்துவிட்டதாகவும், மற்றொரு கட்சியுடன் ரகசியமாக பேசிக்கொண்டு இருப்பதாகவும், பலகோடி ரூபாய் பணம் கைமாறிவிட்டதாகவும், பேரத்தை அதிகரிக்கவே விஜயகாந்த் அமைதியாக இருக்கிறார் என்றும், கற்பனைக்கே எட்டாத வகையில், பல மாதிரி வதந்திகள் பரப்பப்படுகிறது.

ஆனால் இந்த நொடி வரையிலும் தலைவர் விஜயகாந்த் யாரிடமும் கூட்டணியைப் பற்றி பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து எந்த முடிவானாலும் விஜயகாந்த் அறிவிப்பது மட்டுமே தேமுதிகவின் உண்மையான நிலைப்பாடாக இருக்கும்.

தேமுதிக என்ற கட்சியை 2005ல் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகாலம், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், இந்த அளவிற்கு கட்சியை வளர்த்தவருக்கு தேமுதிகவை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பது தெரியாதா?

மக்களின் நலன் கருதி அவர் எடுக்கும் எந்தவொரு தைரியமான முடிவும், நல்ல முடிவாகவே இருக்கும். அந்த நல்ல முடிவை தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

எனவே, விஜயகாந்தைப் பற்றியும், எங்கள் தேமுதிக கட்சியைப் பற்றியும் வரும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்”

இவ்வாறு சந்திரகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply