தேமுதிக பிரமுகர்களை இழுக்க அதிமுக-திமுக திட்டமா?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் மும்முரமாக செய்து கொண்டிருப்பினும் அனைத்து கட்சிகளும் கூட்டணி விஷயத்தில் இன்னும் தெளிவான முடிவை எடுக்கவில்லை. இதற்கு காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. ஆனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை விஜயகாந்த் அரவணைத்து செல்லாததால் பண்ருட்டி ராமச்சந்திரன், அருண்பாண்டியன் உள்பட ஒன்பது எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் சாய்ந்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை வலுவான கூட்டணியுடன் சந்தித்த தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்பது தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மேலும் 12 சதவீதமாக இருந்த அந்த கட்சியின் வாக்கு சதவீதம் ஐந்து சதவீதமாக குறைந்தது.
இந்நிலையில் தற்போது தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்தின் தெளிவில்லாத நிலையால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். விஜயகாந்த் கிங் ஆக இருக்க முடிவெடுத்தால் கட்சியில் இருந்து பல மாவட்ட செயலாளர்கள் மாற்று கட்சியில் சேர தயாராக இருப்பதாகவும், அவர்களை இழுக்க அதிமுக மற்றும் திமுக பேரம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்த் விரைவில் ஒரு தெளிவான முடிவை எடுக்காவிட்டால் அவரது கூடாரம் காலியாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.