தேமுதிக எம்.எல்.ஏ யுவராஜ் திமுகவில் சேர்ந்தார். தேய்கிறதா தேமுதிக
திமுக கூட்டணியில் எப்படியும் தேமுதிக வந்து சேரும் என திமுக தலைமை பெரும் நம்பிக்கையுடன் கடந்த ஒரு மாதமாக வழிமேல் விழிவைத்து காத்திருந்தது. ஆனால் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைவதாக போக்கு காட்டிவிட்டு திடீரென மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துவிட்டது.இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த திமுக, தற்போது தேமுதிகவை உடைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன் முதல் நடவடிக்கையாக தே.மு.தி.க. கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த யுவராஜ் என்பவர் இன்று காலை தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க.வில் இணைந்த பின்னர் யுவராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
நான் கேப்டன் விஜயகாந்துக்கு நெருக்கமானவனாக கட்சியில் விளங்கினேன். நான் என் நெஞ்சை மட்டும் பிளந்து காட்ட வில்லை. அந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தேன். கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த முடிவு தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. செயலற்ற அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், அதற்காக தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதே சிறந்தது என்றும் கருதினோம். தொண்டர்களின் விருப்பமும் அதுவாக இருந்தது. ஆனால் அவர் தி.மு.க. வுடன் கூட்டணி சேராமல் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது எங்களை போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது ஏன்? என்று எனக்கு காரணம் தெரியாது. அவரது இந்த முடிவு அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். அவரது கூட்டணி முடிவு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததால் நான் தி.மு.க.வில் இணைந்தேன். என்னை போன்ற பெரும்பாலான தொண்டர்களும் தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வரும் எண்ணத்தில் உள்ளனர்.
தே.மு.தி.க. நடத்திய நேர்காணலின் போது பெரும்பாலான நிர்வாகிகள் தி.மு.க. கூட்டணிக்கு சென்றால்தான் வெற்றி பெற முடியும். அ.தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்று கருத்து தெரிவித்தனர். அ.தி.மு.க. ஆட்சியில் தே.மு.தி.க.வினர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த ஆட்சியை வீழ்த்த சரியான கூட்டணி அமைக்காத விஜயகாந்தின் பின்னால் இனியும் செல்ல நாங்கள் தயாராக இல்லை. அதனால் தி.மு.க.வுக்கு வந்து விட்டேன்.
இவ்வாறு யுவராஜ் கூறினார்.