சட்டசபையில் தேமுதிக ரகளை. கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை. சபாநாயகர் அதிரடி.

dmdkதமிழக சட்டசபையில் கவர்னர் மீதான உரையின் மீதான விவாதம் இன்று காலை இரண்டாவது நாளாக நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் தேமுதிக கட்சியின் எம்.எல்.ஏ மோகன்ராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததால் அவருக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தேமுதிக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். தங்களை வெளியேற்ற வந்த காவலர்களை தேமுதிக உறுப்பினர்கள் தங்கள் கையில் வைத்திருந்த புத்தகத்தை தூக்கி எறிந்து தாக்க முயன்றதாக கூறப்படுகிரது. பின்னர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தனது இருக்கையை அலங்கோலப்படுத்தியதாகவும், அவைக் காவலர்களை தாக்கியதாகவும் கூறிய சபாநாயகர் தனபால், அவை நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட தேமுதிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை முன்னவரை கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் ‘சட்டசபை  நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்த தேமுதிக உறுப்பினர்களை கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், தேமுதிக சட்டப்பேரவை தலைவர் சந்திரகுமார் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை அடுத்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும், இந்த பிரச்னையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதனிடையே, திமுக சட்டப்பேரவை தலைவர் மு.க.ஸ்டாலின் பேச முயன்றார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஸ்டாலின் பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தேமுதிக உறுப்பினர்கள் மீதான தண்டனை மிகவும் அதிகபட்சவை. இதனை குறைக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Reply