தேமுதிக கட்சியின் சார்பில் நேற்று ஆலந்தூர் மண்டல உதவி ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க தேமுதிகவின் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ் தொண்டர்களுடன் சென்றார். அங்கு அதிமுக தொண்டர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கும் அளவுக்கு விபரீதமானது. இந்த சண்டையில் இரு தரப்பினர்களும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருகும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா அல்லது கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? இல்லை கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிலையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நாட்களை பொதுமக்கள் எண்ணிவரும் நிலையில், அத்துமீறல்களும், அராஜகங்களும் தலைவிரித்து ஆடுகின்றன.
தேமுதிகவின் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ், சென்னை மாநகராட்சியின், ஆலந்தூர் மண்டல உதவி ஆணையாளர் அவர்களை நேரில் சந்திக்க கைபேசிமூலம் முன் அனுமதி பெற்று, நேற்று (26.11.2015) ஆலந்தூர் மண்டல அலுவலகத்திற்கு சென்றார். அப்போது ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் இருந்த, அத்தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் மற்றும் அவருடன் இருந்த அதிமுக குண்டர்களும் சேர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் மனு அளிக்க வந்தவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அங்கே இருந்த காவல்துறையினரும், அதிமுகவினருடன் சேர்ந்துகொண்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவத்தால் தேமுதிக தொண்டர்களை உருட்டி, மிரட்டி, பணியவைக்கலாம் என்றால் அது பகல்கனவாகவே இருக்கும். இதற்கெல்லாம் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அச்சமடையவோ, பயப்படவோ மாட்டார்கள்.
தாக்குதலில் காயமடைந்தவர்களின் புகாரை பெறுவதற்கு காவல்துறை மறுத்துள்ளது. படுகாயம் முற்று மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்படவில்லை, இதற்கெல்லாம் மேலாக குற்றம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கை திருப்பிப்போடும் அவலமும் நடந்தேறியுள்ளது.
இதுபோன்ற பொய் வழக்குகளை கண்டு அஞ்சுகின்ற தேமுதிக தொண்டர்கள் யாருமில்லை. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், நீதிமன்றத்தில் நிரூபித்து, அப்பழுக்கு அற்றவர்களாக வெளியே வருவார்கள். காவல்துறையை தன்கையில் வைத்திருக்கும் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா, இதற்கு பொறுப்பேற்று தவறு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீதும், அதற்கு துணை போன காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.