.மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுகிறது தேமுதிக. விரைவில் அறிவிப்பு
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. முதல்வர் வேட்பாளர் என்று அறிமுகப்படுத்தப்பட்ட விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். இதனால் உற்சாகமிழந்து காணப்படும் தொண்டர்களை உற்சாகப்படுத்த மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவிக்கவுள்ளதாகவும், அடுத்தகட்ட அரசியல் அதிரடி முடிவை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தேமுதிக தரப்பு கூறிவருகிறது. இதுகுறித்து தேமுதிக முன்னணி தலைவர் ஒரு கூறியப்போது
“தேமுதிகவின் தோல்வி குறித்து ஆலோசனை நடத்திய போது, ம.ந.கூட்டணியைத்தான் நிர்வாகிகள் பலரும் குறை சொன்னார்கள். மேலும், ‘‘பூத் செலவுக்குக் கூட பணம் கொடுக்காததால்தான் தோல்வி அடைந்தோம். சொத்துக்களை அடமானம் வைத்து போட்டியிட்டதால், ஏதுமில்லாதவர்களாக உள்ளோம்’’ என்று தேமுதிக வேட்பாளர்கள் சிலர் கூறினர்.
இதன்பேரில், பூத் செலவுக்கு பணம் வாங்காத வேட்பாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க விஜயகாந்த் சம்மதித்தார். இதன்பேரில், 20 பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு ரகசியமாக பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் மக்கள் தேமுதிகவினர் (சந்திரகுமார் அணி) திமுகவுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளை செய்கின்றனர். எனவே, நிர்வாகிகளை திருப்தி செய்யும் வகையில், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளார். கூடவே, கட்சியில் நிர்வாக ரீதியான மாற்றங்களையும் அவர் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்? என்று கூறினார்.