கூட்டணி தேவை என்றால் நீங்கள் எங்களிடம் வாருங்கள். திமுகவுக்கு விஜயகாந்த் அதிர்ச்சி அழைப்பு

கூட்டணி தேவை என்றால் நீங்கள் எங்களிடம் வாருங்கள். திமுகவுக்கு விஜயகாந்த் அதிர்ச்சி அழைப்பு
vijayakanth
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுகவை அடுத்து பெரிய கட்சியாக இருக்கும் தேமுதிகவை இழுக்க பல கட்சிகள் முயன்று வருகின்றது. தேமுதிக இப்போது வரை திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவரும் நிலையில் நேற்று பேட்டியளித்த மு.கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறி உள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணிக்காக எப்போதுமே திமுகவை தேடித்தான் பிற கட்சிகள் செல்ல வேண்டுமா? கூட்டணி தேவை என்றால் நீங்கள் எங்களை நோக்கி வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற பெயரில் பலவித நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசியபோது, “அப்போது அவர், இங்கு கூடியிருக்கும் தொண்டர்களை பார்க்கும் போது உள்ளபடியே மனமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டத்தை காசு கொடுத்து கூட்டியதாகக்  காவல்துறையைச்  சேர்ந்த ஒருவர் கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘அப்படி கூட்டி வந்திருந்தால் ஆட்சியைப்  பிடித்து இருப்போம்’ என்றேன். நாமக்கல் என்றால் ஆளுங்கட்சி மற்றும் திமுகவுக்கு நாமம் போட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அர்த்தம். வருகிற சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள 6 தொகுதிகளிலும் அவர்களுக்குத்  தக்க பாடம் புகட்ட வேண்டும். எப்பாடு பட்டாவது அதிமுக, திமுகவை ஆட்சியில் அமரவிடமாட்டேன்.

திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறி உள்ளார். நீங்கள் ஒரு தடவை எங்களைத்  தேடி வாருங்கள். எல்லா கட்சிகளும் அவரைத் தேடி செல்ல வேண்டுமா?  நீங்கள் வாங்களேன்” என்று தெரிவித்தார்.

கூட்டணி என்றாலா ஒன்று அதிமுகவை அல்லது திமுகவை தேடி செல்வதுதான் இதுவரை தமிழகத்தில் நடந்துள்ளது. ஆனால் முதல்முறையாக எங்களை தேடி வாருங்கள் என்று திமுகவுக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இது திமுக வட்டாரத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திமுக தனது பாரம்பரிய பெருமையை காப்பாற்றுமா? அல்லது ஓட்டுக்காக தேமுதிக அழைப்பை ஏற்று செல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply