சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியா? பிரேமலதா அறிவிப்பால் பரபரப்பு

சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியா? பிரேமலதா அறிவிப்பால் பரபரப்பு
premalatha
கடந்த தேர்தலில் அதிமுகவின் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த விஜய்காந்த்தின் தேமுதிக, இந்த தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என ஏற்கனவே உறுதியாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் தனது தலைமையை ஏற்க விரும்புபவர்களுடன் கூட்டணி அமைக்க தயார் என அறிவித்துள்ளார். இந்நிலையில் தனித்து நின்று வெற்றி பெறும் வலிமை தன்னிடம் உள்ளதாக விஜய்காந்தின் மனைவி பிரேமலதா நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

தே.மு.தி.க.வின் முப்பெரும் விழா கோவையில் நேற்று மாலை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள கோவைக்கு வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மனைவியும், கட்சியின் மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கோவை ராமநாதபுரத்தில் தே.மு.தி.க. சார்பில் அமைக்கப்பட்ட மகளிர் தையலகத்தைத் திறந்து வைத்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தே.மு.தி.க. எப்போதும் ஆதரிக்கும். ஆனால், நான்கரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது காலம் கடந்த செயல். இது தமிழக அரசின் கண்துடைப்பு நாடகம்.

சுப்பிரமணிய சுவாமி – விஜயகாந்த் சந்திப்பு என்பது மரியாதை நிமிர்த்தமானது. அப்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அவை என்ன என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். தமிழ் தொன்மையான மொழி. ஒரு மொழியை தேவைக்காகவும், விருப்பத்திற்காகவும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அதை கட்டாயப்படுத்தக் கூடாது. மொழி திணிப்பு என்பது சரியல்ல.

நீதித்துறை கெட்டுப்போனால் நாடு முன்னேற்றம் அடையாது எனவும், நீதித்துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்தை தே.மு.தி.க. ஆதரிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தே.மு.தி.க. தனித்து நிற்கும் வல்லமையுடன் உள்ளது. தனித்து போட்டியிட முடியும் என்பதை தமிழகத்துக்கு உணர்த்திய கட்சி தே.மு.தி.க. அதை விட இன்னும் பலமுடன் நாங்கள் இருக்கிறோம். தேர்தலுக்கான வியூகங்கள் தயாராகி வருகின்றன. பலம் வாய்ந்த கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்.

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முல்லை வேந்தன் தலைமையில் 10 ஆயிரம் பேர் தே.மு.தி.க.வில் இணைந்துள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து, விஜயகாந்திடம் நேரம் கேட்டுள்ளனர். அடுத்தடுத்து ஏராளமானோர் கட்சியில் இணைவார்கள்”

இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Leave a Reply