கருணாநிதி-ஸ்டாலினுக்கு எதிராக விஜயகாந்த்-பிரேமலதா போட்டியா?
திமுக கூட்டணியில் இணைந்திருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்களுக்கு நான்கு தொகுதிகள் போதும் என்று கூறி ஒரு தொகுதியை மீண்டும் திமுகவிற்கே மனித நேய மக்கள் கட்சி திருப்பி கொடுத்துவிட்டது. இதன் பின்னணியில் விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், நாகை, ஆம்பூர், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை என ஐந்து தொகுதிகள் ஒதுக்கியிருந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தாங்கள் நான்கு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம் என்றும் உளுந்தூர்பேட்டைத் தொகுதியை மீண்டும் தி.மு.க.விற்கே வழங்கி விட்டோம் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
விஜயகாந்தை எதிர்க்க வலுவான வேட்பாளர் வேண்டும் என்பதால் திமுகவுக்கே அந்த தொகுதியை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் போட்டியிட போவதாகவும், அவருடைய மனைவி பிரேமலதா, ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது. கூட்டணியில் சேரவில்லை என்பதால் தங்கள் கட்சியையே உடைக்கும் கீழ்த்தரமான வேலையை செய்த கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவும், இருவரையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே தனது முதல் கொள்கை என கேப்டன் முடிவு செய்திருப்பதாகவும் தேமுதிக வட்டாரங்கள் பரபரப்புடன் கூறுகின்றன. இது உண்மையா என்பது தேமுதிகவின் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததும் தெரிந்துவிடும்.