திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. தேமுதிக நிலை என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ள நிலையில் கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை இன்று சென்னை வந்த அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது என்றும் இந்த கூட்டணியில் வேறு கட்சிகளை இணைப்பது குறித்து திமுக முடிவு செய்யும் என்று கூறிய குலாம் நபி ஆசாத், தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்றும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்றும் அவர் கூறினார். இந்த கூட்டணியில் தேமுதிக சேருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த குலாம் நபி அந்த முடிவை திமுக எடுக்கும் என்றார்
திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளதால் இந்த கூட்டணியில் தேமுதிக வர வாய்ப்பில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைக்கவே தேமுதிக விரும்புவதாகவும், தேர்தலுக்கு பின்னர் மத்தியில் அமைச்சர் பதவியை பெறும் முயற்சியில் தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களின் உதவியால் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை பெற முடியும் என்றும் அதன்மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெறும் நினைப்பில் தேமுதிக இருப்பதாகவும், அக்கட்சியின் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவருகின்றது.
இந்நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய வாய்ப்பு மிகவும் குறைவு என கூறப்படுகிறது.