ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு. கர்நாடக அரசை தொடர்ந்து திமுகவும் மேல்முறையீடு
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, தி.மு.கமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம் என்பவர் இன்று உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார். இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து இந்த மனு மீதான விசாரணையின்போது தெரியவரும்.
திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பில் இருந்த கணிதப் பிழைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதாவது, “ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும்” என சுட்டிக் காட்டுப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கிற்கு காரணமான ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியும் தனது சார்பில் மேல்முறையீடு செய்வாரா? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்ட்டுள்ளது. அவர் தனியாக மேல்முறையீடு செய்வாரா? அல்லது கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போதே தனது கருத்தை தெரிவிப்பாரா? என்றும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.