வெள்ள பாதிப்பிற்கு அதிமுக-திமுக ஆட்சிகளே காரணம். விஜயகாந்த்
அதிமுக, திமுக ஆட்சியில் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி செய்த முறைகேடுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும், நிர்வாக சீர்கேட்டாலும்தான், சென்னை மாநகரம் கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டையும், மழை காலங்களில் வெள்ளத்தையும் அனுபவித்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். நேற்று அவர் விடுத்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை வெள்ளம், தற்போது டெல்டா மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. மோசமான இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், ஜாஸ் சினிமா நிறுவனம் பெயரில் சென்னையிலுள்ள சத்தியம் திரையரங்க வளாகத்திலுள்ள அனைத்து அரங்குகளையும் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 1000 கோடி ரூபாய் மதிப்பில் வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்திலுள்ள 11 திரையரங்குகளை ஜாஸ் சினிமா நிறுவனம் வாங்கியது குறித்த கேள்விக்கு இதுவரை பதில்வராத நிலையில், மீண்டும் சத்தியம் சினிமாவை வாங்கியிருப்பதை என்னவென்று சொல்வது. அதிகார மமதையா? ஆட்சி செய்யும் ஆணவமா? எதுவாக இருந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு விடையளிப்பார்கள்.
அதிமுக, திமுக ஆட்சியில் இதுபோன்ற முறைகேடுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும், நிர்வாக சீர்கேட்டாலும்தான், சென்னை மாநகரம் கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டையும், மழை காலங்களில் வெள்ளத்தையும் அனுபவித்து வருகிறது. தண்ணீரை சேமிக்கவும், மழைநீர் வடிகால்களை முறையாக அமைக்காததும், இயற்கையான நீர்வழிப்பாதைகளை மூடியதன் விளைவே சென்னை மாநகர பாதிப்பிற்கு காரணமென “டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்” அதிமுக, திமுக ஆட்சிகளை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் கடந்த 1980-ம் ஆண்டில் சுமார் 600க்கும் அதிகமான நீர்நிலைகள் சென்னை மாநகரில் இருந்ததாகவும், 2008-ம் ஆண்டு மாஸ்டர் பிளானில் பெரும்பாலான நீர்நிலைகளை காணவில்லை என்றும், 2,792 ஏக்கர் பரப்பிலிருந்த 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு, 1,594 ஏக்கராக குறைந்துள்ளதென்றும், 2,847 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் இருக்கும் நிலையில், 855 கிலோ மீட்டர் நீளத்திற்கு மட்டுமே மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும் இந்த மையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த கால கட்டங்களில் அதிமுக, திமுக ஆட்சிதான் நடைபெற்றது. இரண்டு கட்சிகளும் நடைபெற்ற தவறுகளை மறைத்திட, தாங்கள்தான் மக்களுக்கு உதவி செய்கிறோம் என்பது போல, நிவாரண பொருட்களை ஓடி, ஓடி வழங்குவது போன்ற நாடகத்தை நடத்துகிறார்கள்.
மழை வெள்ள பாதிப்புகளை களைந்திட, தொலைநோக்குப் பார்வையில் எவ்வித நிரந்தர திட்டங்களை தீட்டாமல், பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பெற்று, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும், பாதிப்புகளையும் ஈடுசெய்ய முடியுமா? வெள்ள பாதிப்பின்போது களத்தில் நிற்காத அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் கொடுப்பது போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடத்தில் உருவாக்கவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்கிறார். இது பாதிக்கப்பட்ட மக்களிடம் எடுபடாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை உரிய நேரத்தில் செய்யாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அதனால் பாதிப்புகள் ஏற்படும்போது அரசியல் சுயலாபத்திற்காக நிவாரணம் வழங்குகிறேன், உதவி செய்கிறேன் என்றெல்லாம் நடத்தும் இதுபோன்ற நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “குதிரை ஓடிய பின், லாயத்தை பூட்டுவது போன்ற ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதை பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளனர். இனியும் தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.