‘நமக்கு நாமே’ கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த திமுகவினர் கைது. பெரும் பரபரப்பு.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக நமக்கு நாமே’ என்ற திட்டத்தின்படி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு வருகிறார். முதல்கட்ட பயணத்தை முடித்துவிட்டு, தற்போது இரண்டாவது கட்டமாக அவர் ‘நமக்கு நாமே’ பயணத்தை நடத்தி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக கூட்டம் ஒன்றுக்காக குளத்தை மணலால் மூடிய திமுகவினர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூரில் சுமார் 200 ஏக்கர் தனியார் நிலத்தை சமப்படுத்தி அதில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலத்தை சமப்படுத்தும் பணியில் இருந்த திமுகவின் இங்கிருந்த எடுக்கப்பட்ட மணலை அருகில் உள்ள குளத்தில் கொட்டியதால் குளம் சமதளமானது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியை ஆய்வு செய்த செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் அந்தப் பணிக்குத் தடை விதித்தார்.
மேலும், வருவாய் துறையினர் பாலூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதனால் காட்டாங் கொளத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தண்டபாணி, ஆப்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சந்துரு (எ) ரவிச்சந்திரன், ஆப்பூரை சேர்ந்த சந்தானம் ஆகியோர் மீது நேற்று காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் (1)-ல் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் மூவரையும் வருகின்ற நவம்பர் 6-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிட்டிபாபு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
சிறைக்கு செல்லும் முன் அவர்கள் மூவரும், ”அரசிற்கு சொந்தமான நிலங்களை நாங்கள் அழிக்கவில்லை. தனியாருக்கு சொந்தமான நிலங்களைத்தான் நாங்கள் சமன் செய்தோம். அ.தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கத்தில் எங்களை கைது செய்துள்ளது” என்றார்கள்.
இந்த தகவல் அறிந்து இரவு 7.30க்கு தி.மு.க.வினர் நீதிமன்றத்தில் குவிந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதட்டமான சூழல் நிலவியது. மேலும், காவல் துறையினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.