தமிழக மக்கள் நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை. திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

 karunanidhiதமிழகத்தில் பல சாதனைகள் செய்த திமுக ஆட்சிக்கு கொண்டு வராமல், அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்ததன் மூலம் மக்கள் நன்றியுடன் நடந்து கொண்டார்களா? என்று கேட்க விரும்புவதாக திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்களை குற்றம்சாட்டியுள்ளார்.

தென்சென்னை மாவட்ட திமுக சார்பில், மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஆலந்தூரில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவில் கருணாநிதி பேசியதாவது:

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எல்லாம் முடக்குவதையே அதிமுக வழக்கமாக கொண்டுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம், அண்ணா நூற்றாண்டுவிழா நூலகம். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளது. அதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு அரசு என்பது மக்களைப் பாதுகாக்கின்ற அரசாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய அதிமுக அரசு விபரீதமான எண்ணங்களை கொண்ட அரசாக இருக்கிறது. விளம்பரத்தை தவிர வேறு எதுவும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை.

திமுகவைப் பொறுத்தவரை, யார் எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நன்றி தெரிவிக்க தயாராகவே இருக்கிறோம். ஆனால், அப்படி எந்த திட்டத்தையும் அதிமுக அரசு கொண்டுவந்ததாகக் தெரியவில்லை.

இது நன்றி தெரிவிக்கும் கூட்டம் என்று சொன்னார்கள். ஆனால், நன்றி தெரிவிக்கும் அளவுக்கு மக்கள் நடந்துகொண்டார்களா எனக் கேட்க விரும்புகிறேன். திமுக ஆட்சிக் காலத்தில்தான் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. விலைவாசி குறைக்கப்பட்டது. ஆனால், இதையெல்லாம் மக்கள் நினைத்துப் பார்க்காமல் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். இந்தத் தவறுகளில் இருந்து மக்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். நல்ல திட்டங்களை கொண்டுவந்த திமுக மீது நன்றி விசுவாசம் இருந்தால், எங்களை தண்டித்தது போதும். அதிமுக ஆட்சியில் இருந்தும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்தும் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவிலேயே முதல்வர் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. முதல்வர், அவருக்கான பணிகள் எதையும் செய்வதில்லை. அதற்குக் காரணம் அவரது உடல்நலம் ஒத்துழைக்கவில்லை. முதல்வரைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக இருக்கக் கூடாது. மக்களுக்கு பகிரங்கமாக தெரியவேண்டும். அதுதான் ஜனநாயக ஆட்சியின் இலக்கணம். எனவே, முதல்வர் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அவர் தனது உடல்நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். அவரைப் பத்தோடு பதினொன்று என்ற வகையில் நடத்துகிறார்கள். அவர் என்ன பாடுபடுகிறார் என்பது எனக்குத்தான் தெரியும். அவர் என்னை தனியாகப் பார்த்தால், ஓ வென்று கதறி அழுதுவிடுவார். அந்த அளவுக்கு படாதபாடுபட்டு வருகிறார்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Leave a Reply